2 மணிநேரப் பயணம் 15 நிமிடங்களாகும்! - மும்பைக் கடலில் 17.7 கிலோ மீட்டர் தொலைவுக்குப் புதிய பாலம்

மும்பையில், பாந்திரா - வெர்ஸோவா பகுதியை இணைத்து ரூ. 11,333 கோடி செலவில் 17.7 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாலம் கட்டப்படுகிறது.  அனில் அம்பானியின்  ரிலையன்ஸ் கட்டுமான நிறுவனத்துடன்  இத்தாலி நாட்டு பங்குதார நிறுவனமான அஸ்டால்டியும் இணைந்து, இந்தியாவிலேயே நீளமாக இந்தப்  பிரமாண்ட பாலத்தைக் கட்டுகின்றன.  

மும்பையில் அமையவுள்ள பாலம்

அடுத்த மாதம் பாலத்தின் கட்டுமானப்பணி தொடங்குகிறது. ஐந்து ஆண்டுகளில், பாலத்தைக் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  பாலத்தை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என்பதற்காக,  மகாராஷ்டிர அரசு கட்டுமான நிறுவனங்களை ஊக்கப்படுத்தவும் முடிவு செய்துள்ளது. அதன்படி,  6 மாதங்களுக்கு முன்னரே பாலத்தின் கட்டுமானப் பணி நிறைவுற்றால், ரூ.350 கோடி போனஸ் வழங்கப்படும். அஸ்ஸாமில் லோகித் நதியில் கட்டப்பட்டுள்ள புபான் ஹஸாரிகா சேது என்ற பாலம்தான் தற்போது இந்தியாவில் நீளமானது. இந்தப் பாலம் 9.150 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. பாந்திரா - வெர்ஸோவா பாலம் கட்டப்பட்டால், இந்தியாவிலேயே நீளமான பாலம் என்கிற அந்தஸ்த்தைப் பெறும். 

மகாராஷ்டிர மாநில சாலைப் போக்குவரத்து மேம்பாட்டுக் கழகத் தலைவர் ரதேஷ்யம் மோபால்வர் கூறுகையில், ' 17.7 கிலோ மீட்டர் நீளமுள்ள பாலத்தில் 9.6 கிலோ மீட்டர் தொலைவுக்கு கேபிளில் தொங்கும் பாலமாகக்  கட்டப்படும்.  இந்தப் பாலம், பாந்திரா - ஒர்லி கடல் பாலத்துடன் இணைக்கப்படும். முதலில், 60 ஆயிரம் வாகனங்கள் பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படும். வாகனங்களின்  எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும். டோல் கேட் கட்டணமாக ஆண்டுக்கு ரூ. 170 கோடி முதல் ரூ. 200 கோடி வரை வசூலாகும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது, ஒர்லியில் இருந்து வெர்ஸோவா செல்ல 2 மணி நேரம் ஆகிறது. இந்தப் பாலம் அமைக்கப்பட்டால், வெர்ஸோவாவில் இருந்து 15 நிமிடத்தில் ஒர்லி சென்றுவிட முடியும் '' என்றார். 

பாந்திரா-வெர்ஸோவா பாலத்தின் கட்டுமானப்பணிக்கான ஒப்பந்தத்தைப் பெற, லார்சன் அண்டு டூ்ப்ரோ, சாம்சங் மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களும் முயன்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!