`2,500 தொழிலாளர்கள்; ரூ.2,990 கோடி!’ - இந்தியாவில் உருவாகும் உலகின் மிகப்பெரிய சிலை

குஜராத்தில் வடிவமைக்கப்பட்டுவரும் சர்தார் வல்லபாய் படேலின் சிலை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அவரின் பிறந்தநாளில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகப்பெரிய  சிலை

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது, அம்மாநிலத்தில் 182 மீட்டர் உயரத்தில், இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேலின் சிலை அமைக்கப்படும் என அறிவித்தார். கடந்த 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புக்குப் பிறகு, படேலின் சிலை நிறுவும் பணிகள் மிக வேகமாக நடைபெற்றுவந்தது.

2,500 பணியாளர்களைக் கொண்டு இந்தச் சிலை உருவாக்கப்பட்டு வருகிறது. இதில், சீனாவில் இருந்து புலம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் அடங்குவர். ஒற்றுமையின் சிலை (Statue of Unity) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் சிலையின் வடிவமைப்பு முடியும் தருவாயில் உள்ளது. வரும் அக்டோபர் மாதம் 31-ம் தேதி, அதாவது வல்லபாய் படேலின் பிறந்தநாளன்று இந்த சிலையை பிரதமர் மோடி திறந்துவைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது உருவாகிவரும் இந்தச் சிலை, உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையைப் பெற்றுள்ளது. படேலின் சிலை திறக்கப்பட்ட பிறகு, இந்தப் பகுதி விஷேசமான சுற்றுலாத்தலமாக்க மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . சீனாவில் 128 மீட்டர் உயரமுள்ள புத்தர் சிலையே தற்போது உலகின் மிகப் பெரிய சிலையாக உள்ளது. விரைவில், சர்தார் படேல் சிலை இந்தப் பெருமையை முறியடிக்க உள்ளது. இந்தச் சிலையின் வடிவமைப்பு புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!