`நாகாலாந்துக்கு நேசக்கரம் நீட்டுங்கள்!’ - கேரள மக்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்!

'மழையால் பாதிக்கப்பட்டுள்ள நாகாலாந்து மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்ட முன்வாருங்கள்' என கேரள மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார், முதல்வர் பினராயி விஜயன். 

நாகலாந்தில் கன மழையால் ஏற்பட்ட சேதம்

நாகாலாந்தில், கடந்த சில தினங்களாகப் பருவமழை பெய்துவருகிறது. மழையின் தீவிரம் அதிகரித்துள்ளதால், மாநிலம் முழுவதும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 532 கிராமங்களில் உள்ள 48,000 குடும்பங்கள், தங்களது உடைமைகளை இழந்து மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 3,000 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே, மழையால் ரூ.800 கோடி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கணித்துள்ளது. எனவே, நிவாரண நிதியாக ரூ.100 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என சமீபத்தில் முதலமைச்சர் நெய்பு ரியோ கோரிக்கை விடுத்தார். அதனுடன், மழையால் தத்தளித்துவரும் நாகாலாந்து மக்களுக்காக உதவுங்கள் என அனைத்துத் தரப்பு மக்களிடமும் கோரிக்கை விடுத்திருந்தார் முதல்வர். 

கேரள முதல்வர் பினராயி விஜயன்

இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள நாகாலாந்துக்காக, கேரள மக்கள் உதவ முன்வாருங்கள் என கேரள மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் முதல்வர் பினராயி விஜயன். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், `கொடிய வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து நாம் மீண்டுவருகிறோம். தற்போது, வடகிழக்கில் உள்ள நாகாலாந்து மாநிலத்தில், கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நாம் வெள்ளத்தில் எப்படித் தத்தளித்தோமோ, அவ்வாறு நாகாலாந்து மக்களும் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கண்ணீர் சிந்திவருகின்றனர். முன்னதாக, கேரள வெள்ளச் தேசத்தைப் பார்வையிட வந்த நாகாலாந்தின் துணை முதலமைச்சர், நமக்காக நிதியுதி வழங்கி, நாகாலாந்து மக்கள் சார்பாக ஆறுதல் அளித்தார். அவர்களின் அன்பானது நம் மனதில் என்றுமே நிலைகொண்டிருக்கும். 

தற்போது, வெள்ளத்தால் நாகாலாந்து பலத்த சேதம் அடைந்துள்ளது. உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களையும், மாநிலத்தை மறுசீரமைக்கவும் நாம் நிதியுதவி வழங்க வேண்டும். நிதியுதவி வழங்க முன்வாருங்கள் மக்களே' எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!