வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளில் எந்தக் கட்சிக்கு முதலிடம்? | Controversial speech of BJP MLA Ram kadam in Mumbai goes viral in social media!

வெளியிடப்பட்ட நேரம்: 20:12 (05/09/2018)

கடைசி தொடர்பு:20:17 (05/09/2018)

வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளில் எந்தக் கட்சிக்கு முதலிடம்?

வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளில் எந்தக் கட்சிக்கு முதலிடம்?

த்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி பி.ஜே.பி-யும், இதரக் கட்சிகளும் இப்போதே யுக்திகளை வகுக்கத் தொடங்கிவிட்டன.

என்றாலும், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பி.ஜே.பி-யைச் சேர்ந்த நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர், அவ்வப்போது சமூகத்துக்கு எதிராக ஏதாவதொரு கருத்தைச் சொல்லி, சமூக வலைதளங்களிலும், நெட்டிசன்கள் மத்தியிலும் கண்டனத்துக்கு உள்ளாகி வருவது வாடிக்கையாகிவிட்டது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, பி.ஜே.பி. தேசியச் செயலாளர் ஹெச். ராஜா, நடிகர் எஸ்.வி. சேகர் போன்றோர் அவ்வப்போது ஏதாவது கருத்துச் சொல்லி, சிக்கிக் கொள்வது வாடிக்கை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியாரைப் பற்றி ஹெச். ராஜா பேசிய கருத்து மிகப்பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. தமிழக ஆளுநர் செய்தியாளர் சந்திப்பின்போது, பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கன்னத்தில் வருடிய சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எஸ்.வி. சேகர் தன் முகநூல் பதிவில் ஒட்டுமொத்த பெண் பத்திரிகையாளர்களையும் கொச்சைப்படுத்தி, அது பூதாகரமாக வெடித்தது. ஒருவழியாக, அவர் உச்ச நீதிமன்றம்வரை சென்று முன்ஜாமீன் பெற்றார். 

இந்தச் சூழலில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஷோபியா என்ற மாணவி, தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை செளந்தரராஜன் முன்னிலையில், மத்திய பி.ஜே.பி. அரசுக்கு எதிராக முழக்கமிட்டதால், அந்த மாணவி மீது புகார் தெரிவிக்கப்பட்டு, கைதாகி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சமுதாயத்தில் மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்கும் வகையிலான கருத்துகளை வெளியிடுவோருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அநாகரிகமான, சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தால், அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் வெறுப்பு உணர்வைத் தூண்டும் பேச்சுகள் மீதான வழக்குகளில் பி.ஜே.பி. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முதலிடம் வகிப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பதவியில் உள்ள 15 எம்.பி-க்கள், 43 எம்.எல்.ஏ-க்கள் என 58 பேர், வெறுப்புப் பேச்சு தொடர்பான வழக்குகளில் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் பி.ஜே.பி-யைச் சேர்ந்த 10 எம்.பி.-க்கள் உட்பட 27 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் கூறுகின்றன. 

பி.ஜே.பி. ஆட்சியில் உள்ள மாநிலங்கள் மட்டுமன்றி, அக்கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் ஏதாவதொரு சர்ச்சைக்குரிய கருத்துகளை, நிர்வாகிகளோ, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களோ தெரிவித்து, சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள் என்பதைப் பல தருணங்களில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். 

ராம் கதம் - பி ஜே பி கட்சி எம்.எல்.ஏ

இந்தச் சூழலில் மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த பி.ஜே.பி. எம்.எல்.ஏ ஒருவர், கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பேசிய பேச்சு அடுத்த சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருக்கிறது. மும்பையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடத்தப்பட்ட உறியடி நிகழ்ச்சியில் பங்கேற்ற பி.ஜே.பி. சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், `காதலிக்கும் பெண்கள் பற்றிய தகவலைத் தெரிவியுங்கள்; அவர்களை நான் கடத்திக்கொண்டு வருகிறேன்' என்று குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பை கட்கோபார் பகுதியில் பி.ஜே.பி. எம்.எல்.ஏ. ராம் கதம் ஏற்பாட்டில் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய ராம் கதம், ``இளைஞர்கள் பலர், தாங்கள் விரும்பும் பெண்கள் அவர்களின் காதலை ஏற்க மறுக்கிறார்கள் என என்னிடம் தெரிவித்து உதவி கோருகிறார்கள். நீங்கள் உங்களின் பெற்றோரை அழைத்துக்கொண்டு என்னிடம் வாருங்கள் என நான் அவர்களிடம் சொன்னேன். நீங்கள் காதலிக்கும் பெண், உங்களின் பெற்றோருக்குப் பிடித்து விட்டால், அந்தப் பெண்ணை நான் கடத்திக் கொண்டு வந்து உங்களிடம் ஒப்படைத்து விடுகிறேன்" என்று சொல்லி அதிரடி காட்டினார். 

பி.ஜே.பி. எம்.எல்.ஏ-வின் இந்த தடாலடிப் பேச்சு அடங்கிய வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி, கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது. அவரின் இந்தப் பேச்சுக்குப் பல்வேறு கட்சியினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இதுபற்றி ராம் கதம் எம்.எல்.ஏ-விடம் கேட்டபோது, ``நான் சர்ச்சைக்குரிய வகையில் எதுவும்பேசவில்லை. என்னுடைய பேச்சு, ஊடகங்களில் திரித்து வெளியிடப்பட்டு விட்டது. நீங்கள் விரும்பும் பெண்ணை உங்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன் என்று மட்டும்தான் குறிப்பிட்டேன்" எனத் தன்னிலை விளக்கமளித்துள்ளார்.

பி.ஜே.பி-யைச் சேர்ந்த குறிப்பிட்ட சிலர், இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிப்பதன் மூலம் ஒட்டுமொத்தக் கட்சிக்கும் கெட்டபெயர் ஏற்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். எனவே, அரசியல் சாசன சட்டத்தின் கீழ் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டவர்களானாலும் சரி, கட்சியின் குறிப்பிட்ட நிலையிலான பொறுப்புகளில் இருப்பவர்களானாலும் சரி, தங்களின் பதவியையும், சமூகப் பொறுப்பையும் உணர்ந்து செயல்பட வேண்டும். அது பி.ஜே.பி-க்கு மட்டுமல்ல; எல்லாக் கட்சிகளுக்குமே பொருந்தும் என்பதுதான் நிதர்சனம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்