''குறைந்தபட்ச சம்பளம் கொடுங்க...'' - 15 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் விவசாயிகள் பேரணி! | Farmers rally in Delhi demanding their needs

வெளியிடப்பட்ட நேரம்: 20:56 (05/09/2018)

கடைசி தொடர்பு:21:15 (05/09/2018)

''குறைந்தபட்ச சம்பளம் கொடுங்க...'' - 15 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் விவசாயிகள் பேரணி!

இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு, மூன்று முக்கியத் தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்தும் மிக முக்கியமான விவசாயிகளின் பேரணி இது!

''குறைந்தபட்ச சம்பளம் கொடுங்க...''  - 15 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் விவசாயிகள் பேரணி!

முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் இன்று டெல்லியில் பேரணி நடத்தினர். இந்தியாவின் முக்கியத் தொழிற்சங்கங்கள் நடத்திய இந்தப் பேரணியில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

விவசாயிகள் பேரணி

மும்பையில் நடந்த விவசாயப் பேரணியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.. 

கடந்த மார்ச் மாதம் 6-ம் தேதி, நாசிக்கில் இருந்து மும்பை நோக்கி பேரணியைத் துவங்கினார்கள் விவசாயிகள். விவசாயக் கடன் தள்ளுபடி, வேளாண் விளைபொருள்களுக்கு உரிய விலை, விவசாயிகளுக்கு நில உரிமையை உறுதிசெய்ய வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி, சுமார் 180 கிலோ மீட்டர் தூர பேரணியை நடந்தே கடந்திருக்கிறார்கள், மகாராஷ்டிர மாநில விவசாயிகள். இந்திய விவசாயிகளின் எழுச்சியாகப் பார்க்கப்பட்ட இந்தப் பேரணி நடந்துமுடிந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. ஆனால் மத்திய அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று, டெல்லியில் மீண்டும் ஒரு பேரணியை ஏற்பாடு செய்திருக்கிறது அகில இந்திய கிஷான் சபா, அகில இந்திய வேளாண் தொழிலாளர் யூனியன், மஸ்தூர் கிஸான் உள்ளிட்ட  தொழிற்சங்கங்கள். அதன்படி, இன்று (5.9.18) டெல்லி ஜந்தர் மந்தரில் உள்ள ராம்லீலா மைதானத்திலிருந்து நாடாளுமன்றம் நோக்கி, மாபெரும் பேரணி நடத்தியிருக்கிறார்கள். இதில், இந்தியா முழுவதுமிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் இதில் பங்கேற்றனர்.

விவசாயிகள் டெல்லி பேரணி

 ''இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு, மூன்று முக்கியத் தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்தும் மிக முக்கியப் பேரணி இது'' என்கிறார், அகில இந்திய கிஷான் சபாவின் தலைவர் அஷோக் தவாலே. மேலும் அவர் பேசுகையில், ''இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில், ஆதிவாசிகள், முஸ்லிம்கள் மற்றும் பெண்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. இதற்கு முக்கியக் காரணம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் மோடி அரசும்தான். அதை முறியடித்து, இந்தியாவில் மீண்டும் ஒருமைப்பாட்டைக் கொண்டுவரவும், மதச்சார்பின்மையை நிலைநிறுத்தவும் விவசாயிகளின் இந்தப் பேரணி வழிவகுக்கும். அனைத்து உழைக்கும் மக்களையும் ஒருங்கிணைத்து, அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கான முக்கியப் பேரணியாகவே இது பார்க்கப்படுகிறது'' என்று டெல்லி பேரணிகுறித்துப் பேசியிருந்தார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான விவசாயிகள் இந்தப் பேரணியில் பங்கெடுத்துக்கொண்டு, தங்களுக்கான தேவைகளைக் கோஷங்கள் வாயிலாக முன்வைத்தனர். பணிப்பாதுகாப்பு துவங்கி, அடிப்படைச் சம்பளத்தை வரையறுக்க வேண்டும் என்பதே இந்தப் பேரணியின் முக்கிய அம்சம். 

விவசாயிகளுக்கும், விவசாயக் கூலிகளுக்கும் இந்தியா முழுவதும் வெவ்வேறு விதமான ஊதியங்கள் கொடுக்கப்படுகின்றன. ஒரு மாதத்துக்கு 1000 ரூபாய் சம்பளம் வாங்கும் விவசாயக் கூலிகளும் இங்கே இருக்கிறார்கள். ''என்னுடைய சொந்த ஊரில் இருந்து, இந்தப் பேரணி நடக்கும் இடத்துக்கு வர மூன்று நாள்கள் ஆகியிருக்கின்றன. நான் ஒரு விவசாயக் கூலி. என்னுடைய ஒருநாள் சம்பளம், வெறும் 50 ரூபாய்தான்'' என்கிறார், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சோமாரி தேவி. இவரைப்போலவே குறைந்த சம்பளம் வாங்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டு, நாடாளுமன்றம் நோக்கிச் சென்றிருக்கிறார்கள். 

விவசாயிகள் டெல்லி பேரணி

அகில இந்திய கிஷான் சபா, அகில இந்திய வேளாண் தொழிலாளர் யூனியன், மஸ்துர் கிஸான் தொழிற்சங்கங்கள், 15 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, இந்தப் பேரணியை ஒருங்கிணைத்திருக்கிறார்கள். ''விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, உலகளாவிய பொது விநியோக அமைப்பை உருவாக்கிட வேண்டும்; அத்தியாவசியப் பொருள்களில் விலை ஏற்றத்தைத் தடுக்க வேண்டும்; கெளரவமான வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான நடவடிக்கைகளை அமல்படுத்துதல்; அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் 18,000 ரூபாயாக அறிவிக்க வேண்டும்; தொழிலாளர்களுக்கான சட்டங்களில் திருத்தம் கொண்டுவர வேண்டும்; சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்துதல்; சரியான நேரத்தில் பொது கொள்முதலுக்கு ஆவண செய்ய வேண்டும்; ஏழை விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்; விவசாயத் தொழிலாளர்களுக்கு விரிவான மத்திய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை நடைமுறைப்படுத்தவும், நகர்ப்புறப் பகுதியையும் உள்ளடக்கிய சட்டத்தைத் திருத்தம் செய்யவும்; உணவு பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி அனைத்தையும் உறுதிப்படுத்த வேண்டும்; சமூக பாதுகாப்பு வழங்கவும்; ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சமமான பணிக்காக வேலைவாய்ப்பு மற்றும் சம ஊதியம் வழங்க வேண்டும்; மறுகட்டமைப்பு நிலச்சீர்திருத்தங்களை நிறைவேற்ற வேண்டும்; கட்டாய நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும்; இயற்கைப் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிக்கவும்; புதிய தாராளமயக் கொள்கைகளில் மாற்றங்கள் செய்திட வேண்டும்'' என்ற விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை முன்வைத்து, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் இந்தப் பேரணி நடைபெற்றது.


டிரெண்டிங் @ விகடன்