`அரசு உதவியிருந்தால் தங்கமே வென்றிருப்பேன்!’ - டெல்லி முதல்வரிடம் முறையிட்ட வீராங்கனை

'எனக்கு உதவிசெய்வதாகக் கூறிய நீங்கள், நான்செய்த போனைக்கூட எடுக்கவில்லை' என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவர் முன்பாகவே, ஆசிய விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தப் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற திவ்யா குற்றம் சாட்டினார். 

விளையாட்டு வீரர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. அந்த அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அந்த விழாவில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற திவ்யா காக்ரனும் கலந்துகொண்டார்.

அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலுடனான உரையாடலின்போது, 'காமன்வெல்த் போட்டியில் நான் தங்கப்பதக்கம் வென்றபோது, நீங்கள் என்னைப் பாராட்டினீர்கள். மேலும், எனக்குத் தேவையான உதவிகள் வழங்குவதாகத் தெரிவித்தீர்கள். என்னுடைய தேவைகள் என்னென்ன என்று கேட்டீர்கள். நானும், தேவையானதை எழுதிக் கொடுத்தேன். அதன்பின்பு, நீங்கள் என்னுடைய போன்காலைக்கூட எடுக்கவில்லை. 19 வயதாக இருக்கும்போது, டெல்லிக்காக தங்கம், வெண்கலப் பதக்கங்களை வென்றுகொடுத்தேன். 12 தங்கப்பதக்கங்கள் டெல்லிக்கு வென்று கொடுத்துள்ளேன். ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபோதிலும்கூட, எதுவும் செய்துதரவில்லை.

எல்லோரும், தற்போது என்னைப் பாராட்டுகிறார்கள். ஆனால், எனக்குத் தேவை இருக்கும்போது யாரும் உதவ முன்வருவதில்லை. எங்களுக்கு தற்போது குறைவாகச் செய்யுங்கள். ஆனால், எப்போது எங்களுக்கு உண்மையிலேயே தேவை உள்ளதோ அப்போது தேவையானதைச் செய்யுங்கள். எங்களுக்குத் தேவையான உதவிகள் சரியான நேரத்தில் கிடைத்தால், நாங்கள் எங்களுடைய உழைப்பை முழுமையாகக் கொடுப்போம். வெண்கலப்பதக்கத்துக்குப் பதிலாக நான் தங்கத்தைக்கூட வென்றிருக்கலாம்' என்று தெரிவித்தார். அதற்கு பதிலளித்த அரவிந்த் கெஜ்ரிவால், 'நீங்கள் சொல்வது அனைத்தும் சரி. நீங்கள் மட்டுமல்ல பல்வேறு விளையாட்டு வீரர்களும் இதுபோன்ற புகார்களைத் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து திட்டங்கள் வகுக்கப்படும்' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!