‘அடுத்த இலக்கு ஒலிம்பிக்’ - ஆசியப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு உற்சாகமளித்த பிரதமர்

நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களைப் பிரதமர் மோடி நேற்று சந்தித்துப் பாராட்டுத் தெரிவித்தார். 

பிரதமர்

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியப் போட்டிகளில் இந்திய வீரர்கள் மொத்தம் 69 பதக்கங்களை வென்றுள்ளனர். பதக்கம் வென்றவர்களை நேற்று பிரதமர் மோடி நேரில் சந்தித்துப் பாராட்டு தெரிவித்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ``ஆசியப் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவு இந்த வருடம் இந்திய வீரர்கள் அதிக பதக்கங்களை வென்றது உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருமையைத் தேடித் தந்துள்ளது. இத்துடன் நிற்காமல் ஒலிம்பிக்குக்காக கடுமையாக உழைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். 

வீரர்களின் சந்திப்பு தொடர்பாகப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `கிராமப்புறம் மற்றும் சிறிய ஊர்களில் இருந்து வந்து சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களைப் பார்த்தால் மிகவும் பெருமையாக உள்ளது. கிராமப்புறங்களில்தான் அதிக திறன் உள்ளது. அதைத் தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும். வீரர்கள் இந்தப் பதக்கத்துடன் ஓய்வுபெறாமல் அடுத்து ஒலிம்பிக்கை இலக்காக வைத்து தொடர்ந்து கடினமாக உழைத்து தங்கம் வெல்ல வேண்டும். ஆசியப் போட்டிகளில் பதக்கம் வென்ற அனைவருக்கும் பாராட்டுகள்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!