`அவர்கள்தான் நிஜ ஹீரோக்கள்; நான் அல்ல’ - அடையாளப்படுத்தாமல் களமிறங்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி | IAS officer serving at Kerala relief camp without revealing who he was

வெளியிடப்பட்ட நேரம்: 10:35 (06/09/2018)

கடைசி தொடர்பு:10:42 (06/09/2018)

`அவர்கள்தான் நிஜ ஹீரோக்கள்; நான் அல்ல’ - அடையாளப்படுத்தாமல் களமிறங்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி

யூனியன் பிரதேசத்தில் ஆட்சியராக உள்ள கண்ணன் கோபிநாதன் என்ற அதிகாரி 8 நாள்களாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாமல் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியுள்ளார். 

ஐ.ஏ.எஸ்

குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ளது டாட்ரா மற்றும் நகர் ஹாவேலி யூனியன் பிரதேசம். இங்கு ஆட்சியராக பணிபுரிந்துவரும் கண்ணன் கோபிநாதன் என்ற அதிகாரி தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து 8 நாள்களாகக் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். 9-வது நாள் தன்னை சிலர் அடையாளப் படுத்தியதும் முகாம்களில் இருந்து உடனடியாக புறப்பட்டுச் சென்றுள்ளார். 

கேரளாவின் புதுப்பள்ளியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி, டாட்ரா யூனியன் பிரதேசம் சார்பாக ஒரு கோடி ரூபாயை கேரளாவுக்கு நிதியாக அளிக்க வந்துள்ளார். அன்றைய தினம் கேரள முதல்வரைச் சந்தித்து உதவித்தொகை வழங்கிய பின்னர் திருவனந்தபுரத்தில் இருந்து நேராக, வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட இடமான செங்கனூர் பகுதிகளுக்குச் சென்றுள்ளார். கொச்சிக்கு வரும் நிவாரணப் பொருள்களை தலையில் சுமந்து வந்து முகாம்களில் சேர்ப்பது. பிறகு அதை மக்களுக்கு விநியோகம் செய்வது போன்ற அனைத்து வேலைகளையும் தானாக செய்துள்ளார். கேரளாவில் இவர் இருந்த 8 நாள்களில் ஒருநாள் கூட தன் சொந்த ஊருக்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐ.ஏ.எஸ்

இது குறித்து ஐ.ஏ.எஸ் கண்ணன் கோபிநாதன் கூறும்போது, ``நான் பெரிதாக எதையும் செய்யவில்லை, நான் ஒரு பார்வையாளராக மட்டுமே இங்கு வந்தேன். வெள்ளம் பாதித்த இடங்களில் வேலை செய்த அதிகாரிகளிடம் தான் நீங்கள் இந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டும். அவர்கள்தான் நிஜ ஹீரோக்கள். என்னை கதையாக்காதீர்கள், என்னைப் புகழ்வது நியாயமற்றது. உண்மையில் பல பேர் இந்த வெள்ளத்தில் உழைத்துள்ளனர். அவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வாருங்கள்” எனக் கூறியுள்ளார். இவர் ஐ.ஏ.எஸ் என தெரிந்ததும் பொதுமக்கள் இவரை சூழ்ந்துகொண்டு செல்ஃபி எடுக்கத் தொடங்கியதாகவும் அது தனக்கு கஷ்டமாக இருந்ததால்தான் அங்கிருந்து புறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

தனக்குச் சொந்த விடுப்பு வேண்டும் என்றே தான் வேலை பார்க்கும் இடத்தில் தெரிவித்துவிட்டு வந்துள்ளார் கண்ணன். ஆனால், இவர் மீண்டும் வேலையில் சேர்ந்தபோது அங்கு அலுவலக ரீதியான விடுப்பு என்று குறிப்பிடப்பட்டிருந்தது என்பது கூடுதல் செய்தி.