வானில் பறக்கும்போதே தேஜாஸ் போர் விமானத்தில் எரிபொருள் நிரப்பி சாதனை!

வானில் பறக்கும்போதே தேஜாஸ் போர் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பி, இந்திய விமானப்படை சாதனைபடைத்துள்ளது. இந்தியப் போர் விமானம் ஒன்றுக்கு வானில் எரிபொருள் நிரப்பப்பட்டது இதுவே முதன்முறை. ரஷ்யத் தயாரிப்பான IL-78 MKI  ரக டேங்கர் விமானத்திலிருந்து, தேஜாஸ் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. டேங்கர் விமானம் ஆக்ராவில் இருந்தும், தேஜாஸ் விமானம் குவாலியரில் இருந்தும் புறப்பட்டன. வானில், விமானத்துக்கு எரிபொருள் நிரப்பப்படுவதை மற்றொரு தேஜாஸ் விமானம் கண்காணித்தது. எரிபொருள் நிரப்பப்படவேண்டிய  விமானத்தை பைலட் ரஞ்சித் குமார் இயக்கினார். கோவை அருகேயுள்ள சூலூர் (ஸ்குவாட்ரன் 45) விமானப்படையைச் சேர்ந்த இந்த விமானங்கள், கடந்த செவ்வாய்க்கிழமை  நடத்திய சோதனை வெற்றிபெற்றதாக, விமானப்படை அறிவித்துள்ளது. 

தேஜாஸ் விமானத்தில் எரிபொருள் நிரப்பப்படும் காட்சி

தேஜாஸ் விமானம் ஒன்றைத் தயாரிக்க ரூ.463 கோடி செலவாகும். ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பு இது. இந்திய விமானப்படையில் தற்போது, 40 தேஜாஸ் மார்க்-1 விமானங்கள் உள்ளன.  நவீனப்படுத்தப்பட்ட 83  மார்க் - 1ஏ விமானங்களுக்கு இந்திய விமானப்படை ஆர்டர் கொடுத்துள்ளது.  இதற்கு, ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டுக்குள்  மார்க் - 1ஏ பயன்பாட்டுக்கு வரும். இது தவிர, கடற்படை பயன்பாட்டுக்கு என்று இரு தேஜாஸ் போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. விமானம்தாங்கிப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்கிரமாதித்யாவில் இவை  பரிசோதிக்கப்பட்டுவருகின்றன. கடற்படையில் இவை  இணைக்கப்பட்டால், மிகவும் வலிமைமிக்க கடற்படையாக இந்திய கடற்படை மாறும். 

உள்நாட்டு இலகுரக தேஜாஸ் விமானத்தை நவீனப்படுத்த, இந்திய விமானப்படை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில், இஸ்ரேலிய தயாரிப்பான டெர்பி ரக ஏவுகணை பொருத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.  இந்த  ரக  ஏவுகணைகள், வானத்தில் ஏவக்கூடியவை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!