'ஆட்சிக்காலம் முடியவில்லை' - கலைக்கப்பட்டது தெலங்கானாவின் முதல் சட்டப்பேரவை!

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டது. இதற்கான பரிந்துரைக் கடிதத்தை அம்மாநில ஆளுநரிடம் சந்திரசேகர ராவ் வழங்கினார். அந்த பரிந்துரையை ஏற்ற ஆளுநர், சட்டப்பேரவையைக் கலைக்க உத்தரவிட்டார்.

முதல்வர் சந்திரசேகர ராவ்

ஆந்திராவில் இருந்து பிரிந்து 2014 -ல் புதிதாக உருவான மாநிலம், தெலங்கானா. இங்கு, சந்திரசேகர ராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சி ஆட்சியில் உள்ளது. வரும் 2019 ஏப்ரல் மாதத்துடன் சந்திரசேகர ராவின் ஐந்தாண்டு ஆட்சிக்காலம் முடிவடைகிறது. இதே நேரத்தில், தெலங்கானா மாநில சட்டசபைத் தேர்தலுடன் மக்களவை பொதுத்தேர்தலும் நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. 

இந்த நிலையில், தெலங்கானா சட்டசபையைக் கலைத்துவிட்டு, இந்த ஆண்டே சட்டசபைத் தேர்தலை நடத்த சந்திரசேகர ராவ் அரசு திட்டமிட்டுள்ளதாகப் பேச்சு அடிபட்டது. இதை உறுதிசெய்யும் விதமாக, தெலங்கானா சட்டசபையைக் கலைப்பது தொடர்பாக சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதில், சட்டசபையைக் கலைக்க ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. அதற்கான ஒப்புதலையும் அமைச்சரவை அளித்தது. அதையடுத்து, தெலங்கானா சட்டசபை கலைக்கப்படுவதற்கான பரிந்துரைக் கடிதத்தை ஆளுநர் நரசிம்மனிடம் நேரில் சந்தித்து வழங்கினார் சந்திரசேகர ராவ். தெலங்கானா சட்டசபையைக் கலைக்க அமைச்சரவை அளித்த பரிந்துரைக் கடிதத்தை ஆளுநரும் ஏற்றுக்கொண்டார். ஆட்சியைக் கலைக்க ஆளுநர் உத்தரவிட்டார். புதிய அரசு அமையும்வரை, காபந்து முதல்வராக சந்திரசேகர ராவே நீடிக்க ஆளுநர் நரசிம்மன் கேட்டுக்கொண்டார். ஆளுநரின் கோரிக்கையை சந்திரசேகர ராவ் ஏற்றுக்கொண்டார்.

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு, இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களுக்குத் தேர்தல் நடக்கும் அதே நேரத்தில், தெலங்கானா மாநிலத்துக்கும் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!