கொடூரமாகச் சிதைக்கப்பட்ட இந்தியச் சிறுமி... நடந்தது என்ன? | One more Kashmir kid raped by her step brother

வெளியிடப்பட்ட நேரம்: 16:46 (06/09/2018)

கடைசி தொடர்பு:17:32 (06/09/2018)

கொடூரமாகச் சிதைக்கப்பட்ட இந்தியச் சிறுமி... நடந்தது என்ன?

முன்குறிப்பு: இந்தக் கட்டுரையின் சில பகுதிகள், நடந்த கொடூரமான சம்பவங்களைக் குறித்து பேசுகிறது. இளகிய மனம் படைத்தவர்கள் தயவுசெய்து படிக்க வேண்டாம்.

ன்பது வயதுச் சிறுமி அவள். தன் அண்ணன் மற்றும் அவன் நண்பர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, அமிலம் ஊற்றிச் சிதைக்கப்பட்டிருக்கிறாள். இந்தக் கொடுமை நடந்தது காஷ்மீரில். கதுவா சிறுமியின் அந்த வயலட் நிற உடையும், வன்கொடுமையால் உயிரிழந்துகிடந்த அந்தப் பிஞ்சு முகமும் இன்னமும் நம் மனக்கண்களைவிட்டு அகலாத நிலையில், மீண்டும் ஒரு சிறுமியின் ரத்தம் இந்தியாவில் சிந்தப்பட்டிருக்கிறது.

சிறுமி

நெஞ்சை அறுக்கும் இந்தச் சம்பவம் காஷ்மீரை அடுத்த போனியாரில் நடந்திருக்கிறது. ஆகஸ்ட் 23-ம் தேதியிலிருந்து தன் மகளைக் காணாததால், காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார் சிறுமியின் தந்தை. காவல்துறை தீவிரமாகத் தேட ஆரம்பித்தது. 10 நாள்கள் கழித்து, காட்டுப் பகுதியின் உள்ளே அழுகிய நிலையில் சிறுமியின் உடல் கிடைத்திருக்கிறது. சிறுமியை இந்த நிலைக்கு ஆளாக்கியது அவளின் பெரியம்மா மகன் மற்றும் நண்பர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தங்கையிடமே ஏன் இவ்வளவு கொடூரமாக நடந்துகொண்டான் என விசாரித்தது காவல்துறை. எலும்புகள் வரை சில்லிடவைக்கும் அந்தக் குரூரமான உண்மைகள் வெளிவந்தன.

இறந்த சிறுமியின் தந்தைக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியைவிட, இரண்டாவது மனைவி மீதும் அவர் மகள் (இறந்த சிறுமி) மீதும் மிகுந்த பிரியமாக இருந்திருக்கிறார். இதனால் ஏற்பட்ட பொறாமையில், 9 வயதுச் சிறுமியைப் பழி தீர்த்துக்கொண்டிருக்கிறாள் அந்தப் பெரியம்மா. சம்பவம் நடந்த நாளில் அந்தச் சிறுமியிடம் அன்பாகப் பேசி, அவர்களின் வசிப்பிடத்தையொட்டி 1 கி.மீ  தொலைவிலிருந்த காட்டுப் பகுதிக்கு அழைத்துச்சென்றிருக்கிறார் பெரியம்மா. காட்டுப் பகுதியில் ஆடுகளை மேய்த்து பழக்கம் உள்ளவர் என்பதால், யாரும் வராத இடங்களை நன்கு தெரிந்துவைத்திருக்கிறார். எனவே, அந்த இடத்துக்கு அழைத்துச்சென்றதுடன், தன் மகன் மற்றும் அவன் நண்பர்களையும் வரவைத்து, இத்தகைய கொடூரத்தை நிகழ்த்தியிருக்கிறார். அந்த 9 வயதுக் குழந்தைக்கு நடந்த வன்கொடுமைகளை அருகிலிருந்து ரசித்திருக்கிறார். இன்னொரு கொடுமை, சொந்தத் தங்கையை வன்கொடுமை செய்த அந்த மகனுக்கு 14 வயதுதான் ஆகிறது.

கணவர் மீதும் அவரின் இரண்டாவது மனைவி மீதும் இருந்த கோபத்தை சின்னஞ்சிறு சிறுமியின் மீது காட்டியிருக்கிறார் அந்தப் பெண். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தரையில் கிடந்த சிறுமியின் கழுத்தையும் நெரித்துள்ளார். அப்போதும் உயிர் இருந்த சிறுமியின் தலையில் சுத்தியலால் பலமுறை தாக்கினாராம். இந்தக் கொடூரத்தின்போது நண்பர்களில் ஒருவன், சிறுமியின் கண்களைத் தோண்டி எடுத்திருக்கிறான். இறுதியில், உயிரிழந்த அந்தப் பிஞ்சு உடலை எரித்திருக்கிறார்கள். சாட்சியைச் சுத்தமாக அழிக்க வேண்டும் என்று அமிலம் ஊற்றியும் சிதைத்திருக்கிறார்கள். மிச்சம் மீதி உடலைப் புதருக்குள் வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.  

இதைப் படிக்கும்போதே உடல் முழுக்க நடுங்குகிறது. ஆனால், இப்படி ஒரு கொடுமையைச் செய்த அவர்களின் மனநிலையை என்னவென்று சொல்வது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளில் 70 சதவிகிதம் பேர், நெருக்கமான உறவினர்களால்தாம்  பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது ஒரு சர்வே. அதை நிரூபித்துள்ளது இந்தச் சம்பவம்.

பாலியல் வன்கொடுமை

கள்ளக் காதலுக்கு இடையூறு எனக் கொல்லப்படும் குழந்தைகள், தங்களுக்குப் பிடிக்காத இனத்தில் இருப்பதாலே பாலியல் வன்கொடுமை செய்யப்படும் குழந்தைகள் என நம்மைச் சுற்றி நடக்கும் இன்றைய நிலைமையைப் பார்த்தால், நெஞ்சில் ரத்தம் வடிகிறது. பாலியல் குற்றவாளிகளுக்கு விரைவாகத் தரப்படும் தண்டனை முக்கியம் என்றாலும், வெறும் சட்டங்களால் மட்டுமே இதுபோன்ற குற்றங்களைத் தடுத்துவிட முடியாது. எனில், முற்றுப்புள்ளிக்கு என்ன செய்யப்போகிறோம்?  


டிரெண்டிங் @ விகடன்