வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (06/09/2018)

கடைசி தொடர்பு:18:40 (06/09/2018)

கடன் வாங்கி லாட்டரிசீட் வாங்கியவருக்கு அடித்தது ரூ.1.5 கோடி ஜாக்பாட்! - ஒரே நாளில் கோடீஸ்வரரான தொழிலாளி!

பஞ்சாப்பில், கடன் வாங்கி லாட்டரிசீட் வாங்கிய தொழிலாளி ஒருவருக்கு அடித்திருக்கிறது ஜாக்பாட்.

லாட்டரி

பஞ்சாப் மாநிலம், சங்ரூர் மாவட்டம் மந்தவி கிராமத்தைச் சேர்ந்தவர், மனோஜ் குமார். அன்றாடம் கூலித் தொழிலாளியாக வேலைசெய்து வருகிறார். இந்நிலையில், மனோஜ் குமாருக்கு லாட்டரிமூலம் அதிர்ஷ்டம் வாசல் கதவைத் தேடி வந்திருக்கிறது. 

பஞ்சாப் மாநிலம் சார்பில், `பஞ்சாப் மாநில ராக்கி பம்பர் -2018' என்ற லாட்டரி பம்பர் குலுக்கல் பரிசானது. கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதியில் அறிவிக்கப்பட்டது. இதில், ஒரு லாட்டரி சீட்டை ரூ.200 விலை கொடுத்து வாங்கியுள்ளார் மனோஜ் குமார். அப்போது, மனோஜுக்குத் தெரியாது, தனது தலையெழுத்தை இந்த லாட்டரி டிக்கெட் மாற்றும் என்று. பம்பர் குலுக்கல் பரிசில் வெற்றிபெறும் முதல் இரண்டு நபர்களுக்குத் தலா ரூ.1.5 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது. லூதியானாவில் நடைபெற்ற குலுக்கலில், மனோஜ் குமார் வாங்கிய லாட்டரி எண்ணுக்குப் பரிசு விழுந்துள்ளது. இதனால், தொழிலாளியான மனோஜ், கோடீஸ்வரராகிவிட்டார். 

இதையடுத்து, பஞ்சாப் லாட்டரி இயக்குநர் டிபிஎஸ் பூல்காவை இன்று நேரில் சந்தித்து, பரிசுத் தொகையைப் பெறுவதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்திருக்கிறார். 

தனக்கு அடித்த அதிர்ஷ்டம் குறித்து கூறும் மனோஜ் குமார், `கோடீஸ்வரன் ஆவேன் என்று நான் கனவில்கூட நினைத்துப் பார்க்கவே இல்லை. எனது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் நிதி பிரச்னைகளைச் சமாளிக்க முடியும்' எனக் கூறினார். இதில், ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், ரூ.200 விலை கொடுத்து லாட்டரிசீட் வாங்க மனோஜிடம் பணம் இல்லை. மற்றொருவரிடம் கடன் வாங்கி லாட்டரியை வாங்கியுள்ளார். கடன் பெற்று வாங்கிய லாட்டரிசீட், மனோஜ் குமாரை கோடீஸ்வரர் ஆக்கிவிட்டது.