`அவர் அந்த தவற்றை செய்ய மாட்டார்' - மோகன்லாலை விளாசும் கேரள எதிர்க்கட்சித் தலைவர்! | Mohanlal won't commit the blunder of contesting for BJP says Ramesh Chennithala

வெளியிடப்பட்ட நேரம்: 02:21 (07/09/2018)

கடைசி தொடர்பு:07:16 (07/09/2018)

`அவர் அந்த தவற்றை செய்ய மாட்டார்' - மோகன்லாலை விளாசும் கேரள எதிர்க்கட்சித் தலைவர்!

நடிகர் மோகன்லால் பா.ஜ.க-வில் இணையமாட்டார் என நான் நினைக்கிறேன் என்று கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார். 

ரமேஷ் சென்னிதாலா - மோகன்லால்

கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளைவிட அங்கு தற்போது பரபரப்பாகப் பேசப்படும் விஷயமாக மாறியிருக்கிறது பிரபல நடிகர் மோகன்லாலின் அரசியல் பிரவேசம் குறித்த செய்திகள். மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் மூன்று நாள்களுக்கு முன்பு பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசினார். தன் பெற்றோர்கள் பெயரில் நடத்திவரும் விஸ்வசாந்தி பவுண்டேஷன் சார்பில் புதிய கேரளாவை உருவாக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கவே மோடியைச் சந்தித்தேன் என மோகன்லால் குறிப்பிட்டார். சந்திப்பு குறித்து இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டி பரஸ்பரம் ட்வீட் செய்தனர். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் மோகன்லால் பா.ஜ.க-வில் இணையப்போகிறார் என்றும், வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸின் சசி தரூரை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகி காட்டுத்தீ போல் கேரளாவில் பரவி வருகிறது. 

இதற்கு இரு தரப்பிலும் இருந்து மறுப்புகள் ஏதும் வெளியாகாத நிலையில், கேரள பா.ஜ.க தலைவரான ஸ்ரீதரன் பிள்ளையோ மோகன்லாலை பா.ஜ.க-வுக்கு வரவேற்பதாக சூட்டைக் கிளப்பியுள்ளார். தமிழகத்தைப் போல கேரளாவிலும் பா.ஜ.கவால் வெற்றிகளைக் குவிக்க முடியவில்லை. இதனால் எப்படியாவது கேரளாவில் கால் ஊன்ற வேண்டுமெனப் பா.ஜ.க முயற்சி செய்து வருகிறது. அதற்காகத் தான் நடிகர் சுரேஷ்கோபியை கட்சியில் சேர்த்ததுடன் அவருக்கு எம்.பி பதவியும் வழங்கியது. இந்த நிலையில், மோகன்லால் கட்சியில் இணைந்தால் பா.ஜ.கவை கேரளாவில் கால் ஊன்ற வைத்துவிடலாம் என அக்கட்சித் தலைவர்கள் எண்ணிவருகிறார்கள். இதனால் மோகன்லால் இணைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது. 

அதேநேரம் மோகன்லால் பா.ஜ.கவில் இணைவது குறித்து கேரளாவில் உள்ள மற்ற கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மோகன்லாலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. அந்தவகையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கேரள எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதாலா, ``மோகன்லால் பல்வேறு மக்களும் ரசிக்கிற ஒரு நடிகன். அவர் கேரள மக்களிடையே நல்ல பிரபலமானவர். சமூகத்தால் மதிக்கப்படுபவர். அவர் பா.ஜ.கவில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது போன்ற முட்டாள்தனமான தவற்றை செய்யமாட்டார் என நான் நினைக்கிறேன்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க