நிலத்திற்கு மேலே வந்து இறக்கும் மண்புழுக்கள் - வெள்ளத்தைத் தொடர்ந்து வறட்சியைச் சந்திக்குமா கேரளா?

வெள்ளப் பேரிடர்களின் பெரும் சேதங்களை அனுபவித்துவிட்டு, அதிலிருந்து மீண்டு வரப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் கேரளா மக்கள். அதற்குள், வெள்ளத்தால் நீர் சூழ்ந்து காணப்பட்ட பகுதிகளில், அதைத் தொடர்ந்து கடுமையான வறட்சி ஏற்படுவதற்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கியுள்ளது. வயநாட்டிலும் கொலவயல் பகுதிகளிலும், மண்புழுக்கள் ஏராளமாக நிலத்தின் மேற்பகுதிக்கு வந்து இறந்துகொண்டிருக்கின்றன. 

கேரளா வறட்சி

"மழை நின்ற அடுத்த சில தினங்களிலேயே சூரியனின் வீரியம் அதிகமாகத் தொடங்கிவிட்டது. அது எந்த அளவுக்கு இருந்ததென்றால், எங்கள் நிலங்கள் சூடு தாங்காமல் சிறிது சிறிதாக விரிசலடையும் அளவுக்கு இருக்கிறது. இந்தத் திடீர் மாற்றம் அதிர்ச்சியாக உள்ளது. இவ்வளவு விரைவான மாற்றங்களை நாங்கள் கண்டதில்லை. ஆனால் ஒன்றைக் கண்டுள்ளோம். இரண்டு வருடங்களுக்குமுன் இதேபோன்று மண்புழுக்களும், பூச்சிகளும் இறக்கத் தொடங்கின. அந்த வருடம், நாங்கள் கடுமையான வறட்சியைச் சந்தித்தோம்" என்கிறார் ஆதிவாசி கோத்ர மஹா சபா என்ற பழங்குடியினர் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் சி.கே.ஜானு.

அவர் சொல்வதைப் போன்ற வறட்சிகுறித்த செய்திகள், மாத்ருபூமியில் 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக, விவசாய மேம்பாட்டு ஆராய்ச்சிக் கழகம் ஆய்வு மேற்கொண்டுள்ளார்கள். 80 நாள்களில் 4,000 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்தும் நிலத்தில் நீர் தேங்காமல், இப்போது மண்புழுக்கள் இறந்துகொண்டிருக்கின்றன. இது, மண்ணிலிருக்கும் நுண்ணுயிரிகளை வெகுவாகப் பாதிக்கும். அது, வறட்சிக்கு வழிவகுக்கும். கேரளாவின் தட்பவெப்பநிலை இரவிலிருப்பதைவிட இரண்டு மடங்கு அதிகமாகப் பகலில் இருப்பதும் இதற்கான விளைவாகப் பார்க்கவேண்டியுள்ளது. இயற்கைக்கு மதிப்பளிக்கும் கேரளா மாநிலம்கூட, காலநிலை மாற்றத்துக்குத் தப்பவில்லை. மற்ற மாநிலங்களும் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு இனி செயல்படவேண்டும்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!