இனி கார்டு இல்லாமல் ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கலாம் அசத்தும் ஏர்டெல் வங்கி

ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்கள் இனி பணத்தை டெபிட் கார்டோ கிரெடிட் கார்டோ இல்லாமலேயே எடுக்க முடியும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. கிளவுட் மூலம் பணவர்த்தனைகளை உலகமெங்கும் தரும் எம்பேஸ் (Empays) என்ற நிறுவனத்துடன் இணைந்து IMT எனப்படும் இன்ஸ்டன்ட் மனி ட்ரான்ஸ்ஃபர் சேவையை பேமென்ட்ஸ் வங்கி பயன்பாட்டாளர்களுக்கு வழங்கவுள்ளது.

ஏர்டெல்

ஏர்டெல் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் ஏ.டி.எம்-களில் தங்கள் மொபைல் மூலமாகவே அதன் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியும். இந்த வசதியை ஏ.டி.ஏம்-மில் சொந்தமாகப் பணம் எடுப்பதற்கும் பயன்படுத்தலாம், ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க நிற்கும் இன்னொருவருக்காகவும் பயன்படுத்தலாம். 

மேலும், சொந்தமாகப் பணம் எடுக்கும் முதல் இரண்டு தடவைகளுக்கு 25 ரூபாயிலான பரிமாற்ற கட்டணம் அறிமுக சலுகையாகத் தள்ளுபடி செய்கிறது ஏர்டெல். இந்த வசதியை ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் மட்டுமல்லாமல் சாதாரண போன் வைத்திருப்பவர்களும் *400*2# என்ற எண்ணுக்கு டயல் செய்து பயன்படுத்த முடியும்.

ஏற்கெனவே SBI, Axis போன்ற இந்தியாவின் முன்னணி வங்கிகள் ஏர்டெலின் இந்தத் திட்டத்துக்கு க்ரீன் சிக்னல் காட்டிவிட்டன. இது குறித்துப் பேசிய ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கியின் நிர்வாகத் தலைவர், ``நங்கள் டிஜிட்டல் இந்தியா மீது நம்பிக்கை கொண்டவர்கள். இந்தப் புதுமையான பேங்கிங் வசதி மூலம் எங்களால் முடிந்ததை இதற்கு அர்ப்பணிக்கிறோம்" என்று கூறினார்.

ஏர்டெல்

எம்பேஸ் நிர்வாகத் தலைவர் ரவி ராஜகோபாலன் ``எங்களின் MT வசதியை ஏர்டெல் செயல்படுத்தியுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. IMT தான் உலகின் மிகப்பெரிய கார்டு இல்லாத ஏ.டி.எம் சேவை. இது ஏர்டெல் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக இருக்கும் என நம்புகிறோம்" என்றார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!