சைக்கிள்களை ஏலம் விட்டு ரூ.1.43 லட்சம் வெள்ள நிவாரண நிதி - அசத்திய மாணவர்கள்!

கேரளாவில் அளவுகடந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நிவாரணமாக நிதியுதவியும் பொருளுதவியும் செய்து வருகின்றனர். இந்திய அறிவியல் கழகத்தில் படிக்கும் மாணவர்கள், புதுமையான முறையில் சைக்கிளை ஏலமிட்டு நிவாரண நிதி வழங்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளனர். 

நிவாரண நிதி

சர்வதேச அளவில் அறிவியல் கல்வியில் தலைசிறந்த கல்வி நிறுவனமாக விளங்குகிறது பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம். இங்கு படிக்கும் மாணவர்கள், வளாகத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் பழைய சைக்கிள்களை ஏலம் விட்டு நிவாரணம் வழங்க முடிவு செய்தனர். இதனடிப்படையில் 117 பழைய சைக்கிள்களை ஏலமிட்டு 1,43,680 ரூபாய் திரட்டியுள்ளனர். இதில் 50 சதவிகிதம் கேரள முதலமைச்சரின் வெள்ள நிவாரணத்துக்கும் 50 சதவிகிதம் கர்நாடக முதலமைச்சரின் இயற்கைப் பேரிடர் நிவாரணத்துக்கும் பிரித்து அனுப்பி வைத்துள்ளனர். 

இந்திய அறிவியல் கழகம்

இந்திய அறிவியல் கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் விவேக் சர்மா இதுகுறித்துப் பேசியபோது, ``ஒவ்வோர் ஆண்டும் இந்திய அறிவியல் கழகத்தில் படிக்கும் மாணவர்கள், தாங்கள் பயன்படுத்தும் சைக்கிளை படிப்பை முடித்தவுடன் வளாகத்திலேயே நிறுத்திவிட்டுச் சென்றுவிடுவார்கள். அந்தச் சைக்கிள்களை ஏலமிட்டு அதன்மூலம் கிடைக்கும் தொகையை நிவாரண நிதிக்கு வழங்கலாம் என்று முடிவெடுத்தோம். ஏலத்தில் ஒரு சைக்கிளின் ஆரம்ப ஏலத்தொகை ரூ. 500 என நிர்ணயித்திருந்தோம். ஆனால், 900 ரூபாயிலிருந்து 4,500 ரூபாய் வரை கொடுத்து ஏலம் எடுக்க இங்கு படிக்கும் மாணவர்களும் பணியாற்றும் பணியாளர்களும் முன்வந்தனர். 211 சைக்கிள்கள் ஏலம் விடப்பட்டன. முதல் கட்டமாக, 117 சைக்கிள்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன. அடுத்தகட்டமாக மீதமுள்ள சைக்கிள்களை ஏலம்விட இருக்கிறோம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!