வெளியிடப்பட்ட நேரம்: 09:25 (08/09/2018)

கடைசி தொடர்பு:11:56 (08/09/2018)

கலவரக்காரர்களுடன் இணைந்து கல்லெறிந்த காவலர்... குற்றவாளிகளைக் கைதுசெய்ய நடத்திய நாடகம்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், மக்கள் கூட்டத்தில் இருந்துகொண்டு காவல்துறையினர்மீது கல்லெறிந்த உண்மையான குற்றவாளிகளை  போலீஸார் கைதுசெய்தனர். 

காஷ்மீர்

Photo: பி.டி.ஐ

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், காவல் துறையினர், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வீரர்கள்மீது கல்லெறி சம்பவம் தினம் தினம் அரங்கேறும். அவர்கள் மக்களுடன் கலந்து இருப்பதால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் உருவாகும். இதனால், பெரும்பாலும் காவல்துறையினர் புகைக்  குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை  கலைக்கும் நடவடிக்கையில்தான் ஈடுபடுவார்கள். 

நேற்று, வரலாற்றுச்  சிறப்புமிக்க  ஜம்மா மஸ்ஜித் முன்பு, காவல் துறையினர்மீது கல்லெறிபவர்களைப் பிடிக்க காவல்துறைனர் புதிய யுத்தியைக்  கையாண்டனர். வெள்ளிக்கிழமை  தொழுகைகளை முடித்துக்கொண்டு மக்கள் வெளியே வர, கூட்டத்தில் இருந்து இரண்டு பேர் காவலர்கள்மீது கல்லெறிந்தனர். முதலில், காவலர்கள் எந்தப்  பதிலடியும் கொடுக்காமல் இருந்தனர் . அதன்பின்னர், கூட்டத்தைக்  கலைக்க கண்ணீர்ப்புகைக்குண்டு வீசப்பட்டது. அங்கு கல்லெறிந்த  ஒருவர்,  கல்லெறிந்துகொண்டிருந்த இருவரைத்  துப்பாக்கி முனையில் கைதுசெய்தனர். பின்னர்தான், கல்லெறிந்தவர்களுக்குத்  தெரியவந்தது, அவர்களுடன் சேர்ந்து கல்லெறிந்தவர்  காவல்துறையைச் சேர்ந்தவர் என்று. முகத்தில் துணியைக்கட்டிக்கொண்டு கல்லெறிந்த நபர் காவலர். அவர், கூட்டத்துடன் சேர்ந்து கல்லெறிவது போல நடித்து, உண்மையாகக்  கல்லெறிந்த குற்றவாளிகளைக்  கைதுசெய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்றார்.  போலீஸாரின் இந்த நடவடிக்கையைப் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.