வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (08/09/2018)

கடைசி தொடர்பு:16:31 (25/09/2018)

ரஃபேல் ஊழல் ஒரு பார்வை - இதுவரை என்ன நடந்தது?

"ஐக்கிய முற்போக்கு கூட்டணி இருந்தபோது செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் ஒரு விமானத்திற்கு வெறும் 526.10 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு ஒரு விமானத்துக்கு 1500 கோடிக்கு மதிப்பீடு செய்துள்ளது!" - ரந்தீப் சுர்ஜெவாலா

ரஃபேல் ஊழல் ஒரு பார்வை - இதுவரை என்ன நடந்தது?

ப்ரல் 2015 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஃபிரான்ஸ் நாட்டின் விமான கட்டுமான நிறுவனமான 'டசால்ட்' விமான நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால், முதன்முதலில் 126 ரஃபேல் வகை போர் விமானங்களை வாங்குவதற்கான திட்டம் தீட்டி, ஒப்பந்தம் செய்தது, காங்கிரஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான். 2007-ல் இதற்கான ஒப்பந்தம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் தீட்டப்பட்டது. பறக்கத் தயாரான நிலையில் உள்ள 18 ரஃபேல் போர் விமானங்களை இறக்குமதி செய்யவும், மீதமுள்ள 108 ரஃபேல் போர் விமானங்களை ஃபிரான்ஸ் நாட்டின் 'டசால்ட்' விமான நிறுவனத்துடனும் பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் விமான நிறுவனத்துடனும் இணைந்து 'தொழில்நுட்ப பகிர்வு' மூலம் இந்தியாவிலேயே கட்டமைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.

பின்னர், மோடியின் பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் ஏற்கெனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி 126 ரஃபேல் விமானங்கள் வாங்க ஏற்படுத்தி வைத்திருந்த ஒப்பந்தத்திலிருந்து சில காரணங்களால் பின்வாங்கியது. இரட்டை இன்ஜின் கொண்ட ரஃபேல் விமானங்கள் மிகவும் அதிக விலையுள்ளதாக இருந்தன. மேலும், கிட்டத்தட்ட அந்த ஒப்பந்தங்களுக்கான விவாதம் நடந்து ஒரு தசாப்தம் ஆன நிலையில், விமானங்களின் அதிக விலை குறித்தான சிக்கல்கள் இருந்து வந்தன. இருப்பினும் இந்திய விமானப்படையைப் புதுப்பிக்கவும், தரத்தை உயர்த்தவும் உடனடி அவசியம் இருந்ததினால், தொழில்நுட்ப பகிர்வு செய்து, இந்தியாவில் விமானங்களைக் கட்டமைப்பதைவிட, பறக்கும் நிலையில் உள்ள போர் விமானங்களை டசால்ட் விமான நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்தது.   

மோடி

கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகள் கழித்து அந்த ஒப்பந்தத்தை உறுதி செய்தது மோடி அரசாங்கம். 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதாக அறிவித்தது. டசால்ட் விமான நிறுவனம், இன்ஜின் உற்பத்தி நிறுவனமான சாஃப்ரான் மற்றும் மின்னணு அமைப்பு நிறுவனமான தேல்ஸ் இணைந்து தொழில்நுட்பங்களை டி.ஆர்.டி.ஓ உடன் பகிர்ந்து உற்பத்தி செய்வதாக முடிவானது. இறுதியாகச் செப்டம்பர் 2016-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பாரிஸ் சென்றபோது ஃபிரான்ஸ் - இந்தியா இடையிலான இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்திய ரூபாய் மதிப்பில் 58,000 கோடி ரூபாய் கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டது. முன்பணமாக மொத்தத் தொகையில் 15 சதவிகிதம் அதாவது 8,700 கோடி ரூபாய் கொடுக்கப்படுவதாகவும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதுமட்டுமின்றி, இந்த ஒப்பந்தத்தில் மற்ற ஆயுதங்கள், உதிரிப் பாகங்கள் மற்றும் விண்கற்களைத் தாக்கும் உலகின் அதிநவீன ஏவுகணை ஆகியவை பற்றியும் குறிப்பிடப்பட்டது. 

இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, சில மாதங்களிலேயே அதன்மீது காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டுகளை வைத்தது. "பல பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை, வெளிப்படைத்தன்மையில்லாமல் மூடிமறைக்கிறது. மேலும், ஹிந்துஸ்தான் நிறுவனம் மூலம் போர் விமானங்களை இந்தியாவில் கட்டமைக்கப்படவிருந்ததை ரத்து செய்தது 'மேக் இன் இந்தியா' சந்தித்த மிகப்பெரும் தோல்வி" என்றது.

மேலும் இதுகுறித்து, குற்றச்சாட்டுகள் வைத்த காங்கிரஸ், "விமானத்திற்கான தொகையை அதிகமாக்கியுள்ளது பி.ஜே.பி" என்று கூறியது. "2012-ம் ஆண்டு டிசம்பர் 12 அன்று மிகக்குறைந்த செலவில் ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது. கிட்டதட்ட இந்திய ரூபாய் மதிப்பில் 55,000 கோடி ரூபாயில் 126 போர்விமானங்களை விமானப்படைக்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டது. ஆனால், மோடியின் ஆட்சி இந்த ஒப்பந்தத்தை ஜூலை 2015-ம் ஆண்டு ரத்து செய்தது" என்று காங்கிரஸ் தரப்பு ரந்தீப் சுர்ஜெவாலா குற்றஞ்சாட்டினார்.

ரஃபேல்

அனில் அம்பானியின் 'ரிலையன்ஸ் டிஃபென்ஸ்' நிறுவனத்துடன் 'டசால்ட்' நிறுவனம் அக்டோபர் 3, 2016-ம் ஆண்டு இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் உற்பத்தியை அதிகரிக்க கூட்டு வைத்தது.

மேலும் இது குறித்து பேசிய ரந்தீப் சுர்ஜெவாலா "தொழில்நுட்ப பகிர்வு மூலம் ஹிந்துஸ்தான் விமான நிறுவனம் இங்கு விமானம் கட்டமைக்கவிருந்த வாய்ப்பைப் பறித்து மோடி தனது முதலாளித்துவ நண்பர்களை இங்கு முதலீடு செய்யவிட்டு வேடிக்கை பார்க்கிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி இருந்தபோது செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் ஒரு விமானத்திற்கு வெறும் 526.10 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு ஒரு விமானத்துக்கு 1500 கோடிக்கு மதிப்பீடு செய்துள்ளது." என்கிறார்.

தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த 'ரிலையன்ஸ் டிஃபென்ஸ்' நிறுவனம் "இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை", என்றும்,"ஜூன் 26 , 2016-ம் ஆண்டு அரசாங்கக் கொள்கைப் படி முன்னறிவிப்பின்றி 49% வரை பாதுகாப்புத்துறையில் அந்நிய நேரடி முதலீடு செய்யலாம்" என்கிறது.

இது குறித்து பேசிய பி.ஜே.பி தரப்பு ஜி.வி.எல். நரசிம்ம ராவ் "காங்கிரஸ் வேண்டுமென்றே போலிக் குற்றச்சாட்டுகளை வைக்கிறது. வி.வி.ஐ.பி சாப்பர் ஊழலிடமிருந்து தன்னை காத்துக்கொள்ளவே காங்கிரஸ் இப்படி நாடகமாடுகிறது" என்றார்.