வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (08/09/2018)

கடைசி தொடர்பு:13:50 (08/09/2018)

`25 வருஷமா அவங்க எங்ககூடதான் இருக்காங்க..!’ - மாற்றுத்திறனாளி மூதாட்டியை அரவணைத்த ஏழைத் தம்பதி

மகனை இழந்து, யாருமின்றித் தவித்த முதாட்டி ஒருவருக்கு, எதிர்பாராதவிதமாக ஆதரவுக் கரம்கொடுத்து அரவணைத்துள்ளனர், ஆதரவற்ற தம்பதியர். 

வயது முதிர்ந்த பெண்மணி

ஹிமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள தம்மச்சி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் மனிதநேயம், கல்லையும் கரைய வைத்துவிடும் அளவுக்கு உள்ளது. காது மற்றும் வாய்பேச முடியாத நிலையில், நண்பர்கள் உறவினர்கள் என யாருடைய தயவுமின்றித் தவித்துவந்த பெண்மணிக்கு ஆதரவு கொடுத்திருக்கின்றனர். இதில், என்ன ஆச்சர்யம் என்று தோன்றுகிறதா..? ஆதரவுக் கரம் நீட்டிய தம்பதியும் ஆதரவற்றவர்களே. அவர்களுக்கு குடியிருக்க வீடுகூட கிடையாது. தங்களுடைய வறுமைச் சூழலிலும் மற்றவரின் நிலை கருதி உதவ முன்வந்திருக்கும் குணம்தான், அந்தத் தம்பதியை உயர்த்தியுள்ளது.

வயது முதிர்ந்த பெண்மணிக்கு உதவிய தம்பதி

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: `19 வயதுடைய தனது மகனை இழந்து, யாருடைய ஆதரவுமின்றித் தவித்தார் அந்தப் பெண்மணி. அவரது நிலை கண்டு மிகுந்த வேதனை அடைந்தோம். அதனால், எங்கள் வாழ்நாள் வரை அவரைப் பத்திரமாக பாதுகாத்துக்கொள்ளலாம் என முடிவுசெய்தோம். கடந்த 25 ஆண்டுகளாக, அவரை எங்களுடன் வைத்துப் பராமரித்துவருகிறோம். தற்போதுதான், ஊடகங்களின் கவனம் எங்கள்மீது திரும்பியுள்ளது. நாங்கள் ஏழைகளாக இருக்கிறோம். எனவே,  எங்களுக்கு உதவி செய்ய அரசு முன்வர வேண்டும். அரசிடம் கோரிக்கையும் முன்வைத்துள்ளோம்' என்றார் ஆதங்கத்துடன். 

ஹிமாச்சலப்பிரதேச மாநிலம் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் அமைச்சர் ராஜீவ் சைசல் கூறுகையில், `மக்களுக்கு சேவை செய்யத்தான் எங்கள் அரசாங்கம் செயல்படுகிறது. இப்போதுதான் இந்த விவகாரம் என் கவனத்துக்கு வந்துள்ளது. உரிய விசாரணை நடத்தி அவர்களுக்கு உதவுவேன்' என்றார்.