வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (08/09/2018)

கடைசி தொடர்பு:14:40 (08/09/2018)

`ஊடகங்களுக்கு யார் தகவல் சொன்னது..?' - விபத்துகுறித்து சந்தேகம் எழுப்பும் ஹனான்

கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ள ஹனான், மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். தான் எதிர்கொண்ட விபத்து எதேச்சையாக நடக்கவில்லை, வேண்டுமென்றே நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறார். 

கேரளா மாணவி

குடும்ப வறுமையைப் போக்கவும், கல்லூரி படிப்புச் செலவுக்காகவும் மீன் விற்பனைசெய்து படித்துவந்தார் ஹனான். இப்படியாக நாள்கள் சென்றநிலையில், ஒரு நாள் கேரள ஊடகங்களின் பார்வை சீருடையில் மீன் விற்பனை செய்யதுவந்த ஹனான் மீது திரும்பியது. சமூக ஆர்வலர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலர் தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர். பின்னர், அவருக்கு `ராம்லீலா' இயக்குநர் அருண் கோபி தனது அடுத்த தயாரிப்பான `21-ம் நூற்றாண்டு' என்ற படத்தில் நல்ல கதாபாத்திரம் அளிக்க முன்வந்தார். இந்தத் தகவல் வெளியான அடுத்த நிமிடமே, பட வாய்ப்புக்காகவே தன் துயரக் கதையை வெளியே கூறியதாக சமூக வலைதளவாசிகள் ஹனான்மீது பாய்ந்தனர். இதைத் தடுக்க ஹனானுக்கு ஆதரவாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்ததுடன், அவரை நேரில் சந்தித்து வாழ்த்தவும் செய்தார்.

ஹனான்

இந்நிலையில், கொடுங்கல்லூரில் ஒரு மேடை நிகழ்ச்சியில் பங்கெடுத்துவிட்டு ஹனான் காரில் திரும்பியபோது விபத்து நிகழ்ந்தது. இதில், பலத்த காயம் அடைந்த ஹனான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார். விபத்துகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார். 

விபத்துகுறித்து தற்போது மனம் திறந்துள்ள ஹனான், ``எதேச்சையாக நடந்த விபத்தாகத் தெரியவில்லை. திட்டமிட்டு, வேண்டுமென்றே விபத்து நடத்தப்பட்டிருக்கலாம். காலை 6 மணியளவில் விபத்து நடந்தது. அந்த நேரத்தில், சம்பவ இடத்துக்கு ஆன்லைன் ஊடகங்கள் விரைந்து வந்துவிட்டனர். அவர்களுக்கு, யார் தகவல் கொடுத்தனர் எனத் தெரியவில்லை. என்னிடம் அனுமதி கேட்காமலேயே ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ செய்தனர். இன்னும் என்னைத் தொந்தரவுசெய்துவருகிறார்கள். யார் அவர்களுக்குத் தகவல் அளித்தது, எப்படி அவர்கள் வந்தார்கள் என இப்போதுவரை புரியவில்லை. கார் ஓட்டுநரின் நடவடிக்கையும் சரியாக இல்லை. நடந்த அனைத்தையும் போலீஸாரிடம் கூறிவிட்டேன்'' என்றார்.

ஹனான், விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு ஆனதை அடுத்து, ஹனானின் தந்தை மருத்துவமனைக்குச் சென்று அவரிடம் நலம் விசாரித்திருக்கிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போதுதான் தனது தந்தையைச் சந்தித்திருக்கிறார் ஹனான்.