வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (08/09/2018)

கடைசி தொடர்பு:17:49 (08/09/2018)

கோழிக்கறி, மோமோஸ், போலிப் புகைப்படம்... சர்ச்சைக்குப் பஞ்சமில்லாத ராகுல் காந்தி யாத்திரை!

ராகுல்காந்தி இணையத்தில் இருந்து புகைப்படங்களை டவுன்லோடு செய்து வெளியிடுவதாக ட்விட்டரில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கோழிக்கறி, மோமோஸ், போலிப் புகைப்படம்... சர்ச்சைக்குப் பஞ்சமில்லாத ராகுல் காந்தி யாத்திரை!

ர்நாடகா மாநிலத் தேர்தல் பிரசாரத்துக்காக, கடந்த ஏப்ரல் மாதம்  26-ம் தேதி டெல்லியிலிருந்து ஹூப்ளிக்கு தனியார் விமானத்தில் ராகுல் காந்தி சென்றுகொண்டிருந்தார். ஹூப்ளியை விமானம் நெருங்கிக்கொண்டிருக்கும்போது, திடீரென விமானம் குலுங்கியது. சுமார் 20 விநாடி அங்குமிங்கும் ஆடியது. அப்போது `கயிலாஷ் மானசரோவருக்கு வருகிறேன்' என்று ராகுல் காந்தி மனதுக்குள் வேண்டிக் கொண்டாராம். உடனே விமானத்தின் ஆட்டம் நின்று மீண்டும் சீராகப் பறக்க ஆரம்பித்தது. இதற்கிடையே சிவனின் அருளைப் பெறுவதற்காக தான் வேண்டிக்கொண்டதுபோலவே ராகுல் காந்தி ஆகஸ்ட் மாதம் கயிலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொண்டார். ஆகஸ்ட் 31-ம் தேதி நேபாளம் வழியாக மானசரோவர் பயணத்தைத் தொடங்கினார். "நாடும் நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று சிவனிடம் வேண்டப்போகிறேன்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

ராகுல்காந்தி மானசரோவர் யாத்திரை

ராகுலின் யாத்திரைக்கு முன், கயிலாஷ் மானசரோவர் யாத்திரை பற்றித் தெரிந்துகொள்ளலாம். கயிலாஷ் மலை, இமயமலையில் 6 ஆயிரம் மீட்டர் உயரத்தில் திபெத் எல்லைக்குள்  உள்ளது. இந்த மலைக்குச் செல்லும் வழியில் 4,500 மீட்டர் உயரத்தில் மானசரோவர் ஏரி அமைந்துள்ளது. இந்த இரண்டையும் ஒருங்கே தரிசிக்கச் செல்வதே `கயிலாஷ் மானசரோவர் யாத்திரை' என்பார்கள்.

கயிலாய மலை செல்ல இரு வழிகள் உள்ளன. காட்மண்டு நகர் சென்று, அங்கிருந்து திரிசூல் ஆற்று வழியாகச் சீன எல்லையான யாங்மூவை அடைய வேண்டும். யாத்திரிகர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்டவை இங்கு பரிசோதித்தப் பிறகே அதற்குமேலே அனுமதிக்கப்படுவார்கள். இங்கு இருந்து ஜீப் வழியாகப் பயணிக்கலாம். கடுமையான குளிர் வாட்டும். அதற்கேற்ப தயாராகிக்கொள்ள வேண்டும். சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தில் மானசரோவர் ஏரியைப் பார்க்கலாம். கடல்போலக் காணப்படும் மானசரோவர் ஏரியில் குளித்தால், முக்தி கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் உண்டு. தரைமார்க்கமாகச் சென்று திபெத் எல்லையை அடைந்து, அங்கிருந்து மீண்டும் கயிலாச மலையை நோக்கிச் செல்லலாம். இது சற்று கடினமான பாதை. 

இத்தகைய கடினமான கயிலாஷ் மானசரோவர் யாத்திரையில்தான் தற்போது காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளார். மூன்று நாள்களுக்கு முன் மானசரோவர் ஏரிப் பகுதியை அடைந்த அவர், கயிலாஷ் மானசரோவர் ஏரியின் அழகை வர்ணித்து ஒரு ட்வீட்  போட்டார். அதில், `மானசரோவர் ஏரியின் தண்ணீர் அவ்வளவு சுத்தமாக இருக்கிறது. பார்க்கவே ரம்மியமாக உள்ளது. யார் வேண்டுமானாலும் குடிக்கலாம். இந்தத் தண்ணீர் எல்லாவற்றையும் கொடுக்கிறது. எதையும் எடுப்பதில்லை. வெறுப்பாளர்களுக்கு இங்கே இடம் இல்லை.  இதற்காகவே தண்ணீரை இந்தியர்கள் வணங்குகின்றனர்' எனத் தெரிவித்திருந்தார். 

Rahul gandhi

பொதுவாக, பிரபலங்கள் ஏதாவது வித்தியாசமான செயலில் ஈடுபட்டால் கூடவே சர்ச்சையும் கிளம்பத்தானே செய்யும். மானசரோவர் ஏரியின் அழகை வர்ணித்த ராகுல், அடுத்ததாக அதன் அருகில் உள்ள `ரக்தாஸ்' ஏரியின் புகைப்படத்தையும் ட்வீட் செய்து, `என்னே ஓர் அழகு!' எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், 'ராகுல் காந்தி, இந்தப் புகைப்படங்களை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்து ட்வீட் செய்வதாக' ட்விட்டரில்  குற்றச்சாட்டு கிளம்பியது. 

முன்னதாக மலையேறத் தொடங்கும் முன் ராகுல் காந்தி காட்மண்ட் வூட்டு ரெஸ்டாரன்டில் கோழிக்கறியுடன் மோமோஸ் சாப்பிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. யாத்திரையின்போது அவர் அசைவம் சாப்பிட்டதாக சில மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், ராகுல் காந்தி அசைவம் சாப்பிட்டதாகச் சொல்லப்படும் வூட்டு ரெஸ்டாரன்ட், ராகுல் காந்திக்கு சைவ உணவு மட்டுமே வழங்கியதாகத் தெரிவித்துள்ளது.

உஷாரா இருங்க ராகுல்ஜி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்