வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (08/09/2018)

கடைசி தொடர்பு:17:42 (08/09/2018)

அறிவைத் தேடுபவர்களுக்கு வயது தடையா? - 89 வயதில் பிஹெச்.டி படிக்கத் துடிக்கும் `வாலிபர்’

படிப்பதற்கு ஆர்வம் இருந்தால்போதும், வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபணம் செய்திருக்கிறார், 89 வயது  முதியவர் ஒருவர். 

89 முதியவர் ஒருவர்  பிஹெச்டி  படிக்க நுழைவுத் தேர்வு எழுதும் முதியவர்

Photo Credit - DC

சாரணபசவராஜ் பிசரஹள்ளி (Sharanabasavaraj Bisarahalli) 89 வயதாகும் இவர் ஓய்வுபெற்ற ஆசிரியர். தற்போது, ஹம்பி கன்னடப் பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி படிப்பதற்காக நுழைவுத் தேர்வு எழுதியிருக்கிறார். 1929-ம் ஆண்டு பிறந்த இவர், பள்ளிப் பருவத்திலேயே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன்பிறகு, கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். பின்னர், பல கிராமப் பள்ளிகளில் பணியாற்றி, 1992-ம் ஆண்டு ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். இவருக்கு, திருமணமாகி  ஆறு பிள்ளைகள் இருக்கின்றனர். 

ஓய்வுபெற்ற பிறகும் தனது கல்வி ஆற்றலை அதிகரித்துக்கொள்ள விரும்பிய சாரணபசவராஜ் பிசரஹள்ளி, தார்வாட் பல்கலைக்கழகத்தில் கன்னட இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இதற்கிடையில், 10-க்கும் மேற்பட்ட புத்தங்களையும் எழுதியிருக்கிறார். 

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஹம்பி கன்னடப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்புக்காக நுழைவுத் தேர்வை எழுதியிருக்கிறார் . ஆனால், இடம் கிடைக்கவில்லை. இருப்பினும், முயற்சியை அவர் கைவிடவில்லை. இந்த முறை நிச்சயம் பிஹெச்.டி படிக்க இடம் கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையுடன் கூறுகிறார்.  

 ``இந்த முறை பரீட்சைக்கு நன்கு தயாராகி உள்ளேன். அதனால், நிச்சயம் பிஹெச் டி படிக்க இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றார். 

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சாரணபசவராஜ் பிசரஹள்ளியிடம் பயின்ற மாணவருடன் அவர் நுழைவுத் தேர்வு எழுதியதுதான். 'அறிவைத் தேடுபவர்களுக்கு வயது என்பது ஒரு தடையே இல்லை' என சாரணபசவராஜ் நிரூபித்திருக்கிறார்.