`தவறு நடப்பது சகஜம்தான்!’ - பாலியல் புகார்குறித்து கேரள மகளிர் ஆணையத் தலைவி சர்ச்சைக் கருத்து

கேரள மாநில எம்.எல்.ஏ, பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாகப் பேசியுள்ள கேரள மகளிர் ஆணையத் தலைவரின் கருத்து, சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது.

மகளிர் ஆணைய தலைவர்

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., பி.கே. சசி. இவர், சொர்ரனூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கிறார்.  இவர்மீது, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச்சேர்ந்த இளம் பெண் ஒருவர், பாலியல் பலாத்கார புகார் தெரிவித்திருந்தார். குற்றச்சாட்டுக்கு ஆளான சட்டமன்ற உறுப்பினர் சசி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்தினர்.  

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக  அம்மாநில மகளிர் ஆணையத் தலைவி ஜோசபின் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், `இதுபோன்ற செயல்கள் ஒன்றும் புதிதல்ல. மனிதர்கள் தவறு செய்வது சகஜம். கட்சிக்குள்ளிருக்கும் சிலரும்கூட இது போன்ற செயலைச் செய்திருக்கலாம். அது கட்சியிலிருக்கும் பிரச்னை. இந்தக் குற்றச்சாட்டுகுறித்து எங்களுக்கு எந்தப் புகாரும் வரவில்லை. நாங்களே முன்வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றாலும்கூட, சில அடிப்படைத் தகவல்கள் தேவை. அதை பாதிக்கப்பட்டவரோ, அல்லது ஊடகங்கள் மூலமாகவோ வெளியாகியிருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாத நிலையில், எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளார்.  மகளிர் ஆணையத் தலைவியின் இந்தக் கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!