வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (08/09/2018)

கடைசி தொடர்பு:21:00 (08/09/2018)

`இடிந்துவிழும் நிலையில் கட்டடம்!’ - ஹெல்மெட்டுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்

தெலங்கானாவில் உள்ள அரசு மருத்துவமனையில் கட்டடங்களின் மோசமான நிலையைக் கண்டித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஹெல்மெட் அணிந்தபடி நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து நூதன முறையில் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். 

போராட்டம் நடத்தும் டாக்டர்கள்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மாநில அரசு எடுத்து நடத்தும் உஸ்மானியா பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தினமும் உள் நோயாளிகள் புற நோயாளிகள் என 100-க்கும் மேற்பட்டோர் வந்துசெல்வர். ஆனால், மருத்துவமனை கட்டடம் பழைமையானது என்பதால் தற்போது உயிருக்கே அச்சுறுத்தலாக உள்ளது. கட்டடத்தின் மேற்கூரையில் போடப்பட்டிருந்த சிமென்ட்கள் செதில்களாக விழுகிறது. இதனால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், மருத்துவர்கள் செவிலியர்கள் என மருத்துவமனையில் உள்ள அனைவரது உயிருக்கும் ஆபத்து என நிர்வாகம் சார்பில் கடந்த மாதம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. 

மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பிரவீன் என்ற நோயாளி தலையில் பெரிய சிமென்ட் துண்டு ஒன்று கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதியன்று விழவிருந்தது. அந்த விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பிவிட்டார். இந்நிலையில், தெலங்கானா மாநில மருத்துவ சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் மருத்துவமனையில் ஆய்வுசெய்து, ஆபத்தான நிலையில் கட்டடம் இருப்பதாக அறிக்கை சமர்ப்பித்தனர். இருப்பினும், அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

போராட்டம் நடத்தும் டாக்டர்கள்

இதனையடுத்து, உயிருக்கே அச்சுறுத்தலாக இருக்கும் மருத்துவமனையை மறுசீரமைக்க அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி மருத்துவர்கள் செவிலியர்கள் நூதன முறையில் ஹெல்மெட் அணிந்து நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் தலைவர் மருத்துவர் பாண்டா கூறுகையில், `ஆபத்தான நிலையில் உள்ள கட்டடத்தால் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என அனைவருக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அதனால், தெலங்கான அரசாங்கத்திடம் ஒன்றை மட்டும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.விரைந்து நடவடிக்கை எடுங்கள்' எனத் தெரிவித்தார்.