`அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை' - செயற்குழுவில் எதிர்க்கட்சிகளுக்குச் சவால் விடுத்த அமித் ஷா!

பா.ஜ.க மேக் இன் இந்தியா எனக் கூறுகிறது. ஆனால் காங்கிரஸோ பிரேக்கிங் இந்தியா எனச் செயல்படுகிறது என அமித் ஷா பேசியுள்ளார்.

அமித் ஷா

பா.ஜ.க-வின் செயற்குழுக்கூட்டம் நேற்று டெல்லியில் தொடங்கியது. இதில் செயற்குழு உறுப்பினர்கள், பிரதமர் மோடி, அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் தற்போது பா.ஜ.க நிர்வாகிகள் தேர்தல் கிடையாது. இதனால் மேலும் ஒரு ஆண்டுக்கு அமித் ஷா பா.ஜ.க-வின் தேசிய தலைவராக நீட்டிப்பார் எனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன் பின்னர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் பேசியது குறித்து, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அதில், ``பா.ஜ.க மேக் இன் இந்தியா எனக் கூறுகிறது. ஆனால் காங்கிரஸோ பிரேக்கிங் இந்தியா எனச் செயல்படுகிறது. கடந்த பொதுத்தேர்தலை விட வரும் தேர்தலில் பா.ஜ.க  அதிக இடங்களைக் கைப்பற்றும். அதற்காக இப்போது இருந்தே செயல்படுவோம்.

`யாராலும் வெல்ல முடியாத பா.ஜ.க' என்ற கோஷத்துடன் தேர்தல் பணிகளை தொடங்குவோம். தற்போது வரை 19 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியில் உள்ளது. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மக்களின் மனநிலையை அறிந்து எதிர்க்கட்சிகளுக்கு எதிராகச் செயல்படுங்கள். பா.ஜ.க-வுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. அப்படி நடப்பதற்கெல்லாம் வாய்ப்பில்லை. அது வெறும் கண்துடைப்பே. நமது ஆட்சியில் தான் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நமது திட்டங்களுக்கு மக்கள் பெருவாரியான ஆதரவு அளிக்கிறார்கள். பிரதமர் மோடி செயல்படுத்தியுள்ள நலத்திட்டங்களை முன்னிறுத்தி பிரசாரம் செய்யுங்கள். எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரங்களை, நாடகத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்" எனப் பேசினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!