வெளியிடப்பட்ட நேரம்: 13:12 (09/09/2018)

கடைசி தொடர்பு:13:12 (09/09/2018)

மசூதியைப் பராமரித்து வரும் `இந்து' - கலவரத்தில் வென்ற மனிதநேயம்

இயற்கை பேரிடர் அல்லது போர் உள்ளிட்ட ஆபத்தான நேரங்களில், ஒன்றிணைதல் அல்லது பிரிதல் ஆகிய இரண்டு காரணிகளை நோக்கித்தான்  மனிதம் இயல்பாக நகர்கிறது. 

மசூதியை பராமரித்து வரும் இந்து

Photo credit- TOI

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. மூன்று வாரங்கள் நீடித்த கலவரத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த இக்கட்டான நேரத்திலும் சமத்துவத்துக்கான ஒரு செயலை எடுத்து, அதனை இன்றுவரையிலும் விடாமல் செய்து வருகிறார் ராம்வீர் காஷ்யப். 

முசாபர்நகரில் அன்றைய நாள் கலவரத்தில் நானஹேடா கிராமத்தில் உள்ள 120 ஆண்டுகள் பழைமையான மசூதியைக் கலவரக்காரர்கள் ஒன்றுகூடி இடிக்க  முயன்றுள்ளனர். அவர்களைத் தடுக்க, கிராமத்தினரிடம் பேசி அவர்களை ஒன்று திரட்டி மசூதியை இடிக்க வந்த கலவரக்காரர்களை விரட்டி அடிக்கச் செய்திருக்கிறார் ராம்வீர். இந்த சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் கடந்து விட்டது. அன்றிலிருந்து இன்றுவரை அவர் மசூதியைப் பராமரித்து வருகிறார்.

இது பற்றி ராம்வீர் காஷ்யப் கூறுகையில், `மசூதிக்கு 100 மீட்டர் தொலைவில் இருக்கிறது என்னுடைய வீடு. தினமும், மசூதியை சுத்தம் செய்து, மெழுகுவர்த்தி ஏற்றுவேன். இது என்னுடைய மதக் கடமை. அனைத்து வழிபாட்டு ஸ்தலங்களையும் மதிக்க வேண்டும் என நம்பிக்கை எனக்கு கற்பித்துக் கொடுத்திருக்கிறது. இந்த கிராமத்தில் சுதந்திரத்துக்கு முன் அதிகமான இஸ்லாமிய மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். பின்னர், அவர்கள் இடம்பெயர்ந்து விட்டனர். உறவினர்களின் திருமணம் அல்லது விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குக் கலந்து கொள்ள வருபவர்கள் இந்த மசூதிக்கு வந்து தொழுகை செய்வார்கள்' என்றார்.

`பிறப்பில் இந்துவாக இருப்பவர் மசூதியைப் பராமரித்து வருவது மிகவும் ஆச்சர்யமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. அவரது பெருந்தன்மை மற்றும் மனிதநேயம் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு.மசூதியைப் பராமரிக்க யாரிடமும் உதவிக் கேட்டதில்லை ராம்வீர். ஒவ்வொரு ரம்ஜான் பண்டிகைக்கும் தனது சொந்த பணத்திலேயே மசூதியை வெள்ளை அடித்து வருகிறார்' என நெகிழ்கிறார் அப்பகுதியை சேர்ந்த அகமது.