`மூன்று வாரங்களாக உரிமை கோரப்படாத கைப்பை!’ - கடிதம் எழுதி உரியவரிடம் சேர்த்த அரசுப் பேருந்து நடத்துநர் | bus conductor effort to trace the owner of a lost wallet in kerala

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (09/09/2018)

கடைசி தொடர்பு:17:00 (09/09/2018)

`மூன்று வாரங்களாக உரிமை கோரப்படாத கைப்பை!’ - கடிதம் எழுதி உரியவரிடம் சேர்த்த அரசுப் பேருந்து நடத்துநர்

கேரளாவில், பேருந்தில் பையைத் தொலைத்தவரைக் கண்டுபிடிக்க பஸ் கன்டெக்டர் ஒருவர் எடுத்த முயற்சி அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. 

கேரளா கன்டெக்டர் ஜெயக்குமார்

Photo Credit: mathubhumi

திருவனந்தபுரம் மாவட்டம் வெஞ்சாரமூடுவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். அரசுப் பேருந்து நடத்துநராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், எப்போதும்போல் பணிக்குச் சென்றிருக்கிறார் ஜெயக்குமார். கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதியன்று கிழக்குக் கோட்டம் (East Fort) பஸ் நிலையத்தில், பணியில் இருந்தார். அப்போது, பேருந்தில் ஏறிய அவர், பெரிய கைப்பை ஒன்று சீட்டின் அடையில் கிடந்திருப்பதைக் கண்டிருக்கிறார். கைப்பையை எடுத்த ஜெயக்குமார் பையின் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்திருக்கிறார்.

பையில் ஒட்டுநர் உரிமம், தொழிலாளர் அட்டை, சவுதி அரேபியாவின் குடியிருப்பு உரிமை அட்டை, இந்திய ரூபாய் மற்றும் வெளிநாட்டு கரன்சி உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளது. இதனையடுத்து, உடனடியாக உரியவரிடம் பையை ஒப்படைத்து விடலாம் என ஆவணங்களில் போன் நம்பரைத் தேடியுள்ளார். ஆனால், பையில் போன் நம்பர் இல்லை. என்ன செய்வது என்று யோசித்த ஜெயக்குமார், பேருந்து நிலைய அதிகாரியிடம் கைப்பையை ஒப்படைத்து விட்டார். அதோடு, காவல் நிலையத்திலும் தகவல் தெரிவித்த ஜெயக்குமார், வாட்ஸ் அப்பிலும் இது குறித்து தகவலைப் பகிர்ந்து உள்ளார். 

மூன்று வாரங்கள் கடந்து யாரும் அந்த கைப்பைக்கு உரிமை கோர முன்வரவில்லை. இதனால், என்ன செய்வது என்று மீண்டும் யோசித்த ஜெயக்குமாருக்கு சட்டென ஒரு யோசனை தோன்றியுள்ளது. ஓட்டுநர் உரிமத்தில் உள்ள முகவரிக்குக் கடிதம் எழுதலாம் என முடிவு செய்து, பதிவுத் தபாலை அனுப்பினார். 

கைப்பைக்கு உரியவர் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த அனூப். சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். கைப்பையைக் காணவில்லை எனப் பல இடங்களில் தேடிய அவர், கடைசியாகக் காவல்நிலையத்திலும் புகார் அளித்திருக்கிறார். இப்படியான நிலையில், ஜெயக்குமார் எழுதிய கடிதம் கிடைக்கவே, வெஞ்சாரமூடு பேருந்து நிலையத்துக்கு விரைந்தார். 

தன்னுடைய முக்கிய ஆவணங்கள் அடங்கிய கைப்பையைக் கண்டவுடன் ஆனந்தக் கண்ணீருடன் ஜெயக்குமாரிடம் நன்றி தெரிவித்தார் அனூப். தனக்கு உதவிய ஜெயக்குமாருக்கு பரிசு கொடுக்க விரும்பினார் அனூப். ஆனால், அதனை நிராகரித்து விட்டார் ஜெயக்குமார். கிடைத்தவரை போதும் என திருடிச் செல்லும் திருடர்கள் மத்தியில் இப்படியும் ஒரு மனிதர் என சுற்றியிருந்தவர்கள் ஜெயக்குமாரை வெகுவாக பாராட்டினர். 

மனிதாபிமானத்துடன் 15 ஆண்டுகளாக நடத்துநராகப் பணிபுரிந்து வரும் ஜெயக்குமாருக்கு ஒரு `சல்யூட்'.