கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கன்னியாஸ்திரி! - கேரளாவில் அடுத்த சர்ச்சை

கேரளா மாநிலத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் இருந்து சூசன் மேத்யூ என்ற கன்னியாஸ்திரியின் உடலை சடலமாக போலீஸார் மீட்டுள்ளனர். 

கேரளா

Photo Credit: ANI

கேரளாவில், அண்மைக் காலமாக கன்னியாஸ்திரிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. முன்னதாக, கோட்டயம் சீரோ மலபார் சபையைச் சேர்ந்த பிஷப் பிராங்கோ என்பவர் கன்னியாஸ்திரியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இந்நிலையில், கொல்லம் மாவட்டத்தில் உள்ள பதானாபுரத்தில் மவுண்ட் தாபோர் கான்வென்ட் வளாகத்தில் உள்ள கிணற்றில் கன்னியாஸ்திரியின் உடல் சடலமாக மிதந்துள்ளது. இதைக் கண்ட நிர்வாகிகள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கன்னியாஸ்திரியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளார். 

சம்பவம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், `கன்னியாஸ்திரியின் பெயர் சூசன் மேத்யூ. அவர், செயின்ட் ஸ்டீபன்ஸ் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். கான்வென்டில் தினசரி காலை 8 மணிக்கு நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டத்தில் அவர் இன்று கலந்து கொள்ளவில்லை. உடல்நிலையைக் காரணம் காட்டி அவர், பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. வலிப்பு நோய்க்கான சிகிச்சையை அவர் எடுத்து வந்திருக்கிறார். இதற்காக, அவர் மருத்துவரை சனிக்கிழமை சந்தித்திருக்கிறார். அவரது உடலில் காயங்கள் உள்ளது. தற்போதுதான் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளோம்' என்றார். 

சூசன் மேத்யூ, செயின்ட் ஸ்டீபன்ஸ் பள்ளியில் கடந்த 12 ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!