வெளியிடப்பட்ட நேரம்: 10:13 (10/09/2018)

கடைசி தொடர்பு:10:22 (10/09/2018)

`களத்தில் இறங்கிய ராகுல், சில இடங்களில் ரயில் மறியல் போராட்டம்!' - எப்படி இருக்கிறது பாரத் பந்த்

'பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்டவற்றுக்கு மத்திய அரசு எடுத்த தவறான பொருளாதாரக் கொள்கையே காரணம்' என பா.ஜ.க-வை கண்டித்து காங்கிரஸ் இன்று பாரத் பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

காங்கிரஸுடன் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட 21 கட்சிகள் இணைந்து பாரத் பந்த்துக்கு ஆதரவளித்தன. இதையடுத்து, பரபரப்பாகத் தொடங்கிய நாடுதழுவிய முழு அடைப்புப் போராட்டம் சூடுபிடித்துள்ளது. கர்நாடகாவில் பெரும்பாலான தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதோடு, உபெர், ஓலா உள்ளிட்ட கால் டாக்சிகள், ஆட்டோ சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன. 

ராகுல் தலைமையில் பாரத் பந்த் போராட்டம்

ஒடிசாவில், அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தெலங்கானாவில், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல, ஆந்திராவில் இடதுசாரி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில மாநிலங்களில் எதிர்க்கட்சியினர் ரயில்களை மறித்தும், ரயில் தண்டவாளங்களின் குறுக்கே அமர்ந்தும் போராட்டம் நடத்திவருகின்றனர். ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

ராகுல் தலைமையில் பாரத் பந்த் போராட்டம்

எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து, தலைநகர் டெல்லியில் ராஜ்காட்டில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 9 மணியளவில் பேரணியைத் தொடங்கினார். ராகுல் காந்தியுடன் எதிர்க்கட்சித் தலைவர்களும் பேரணியில் கலந்துகொண்டனர். நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதோடு, பல மாநிலங்களில் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது. 

தமிழகத்தில், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் அரசுப் பேருந்தின்மீது கல்வீசித் தாக்கியதில் கண்ணாடி உடைந்தது. இதனால், மாநிலம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டு, தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகா மற்றும் கேரளா எல்லையில் தமிழகப் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.