முதுகை படிக்கட்டாக்கிய கேரளா மீனவருக்கு கார் பரிசு! - 'எதையும் எதிர்பார்த்துச் செய்யவில்லை' என உருக்கம்!

கேரளா வெள்ளத்தின்போது நடந்த  மீட்புப்பணியில் முதுகை படிக்கட்டாக்கி,பெண்கள் படகுகளில் ஏற உதவிய மீனவர் ஜெய்ஷாலுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 

வெள்ளத்தில் பணியாற்றிய மீனவருக்கு கார் பரிசு

மலப்புரத்தைச் சேர்ந்த ஜெய்ஷால் (32), கேரள வெள்ளத்தின் கடற்படை வீரர்களுக்கு இணையாக மீட்புப்பணியில் ஈடுபட்டார். மீட்புப் பணியின்போது,  ஜெய்ஷால் தன் முதுகை படிக்கட்டாக்கிக்கொள்ள, பெண்கள் அதில் ஏறி படகில் அமர்ந்த சம்பவம் இந்தியா முழுவதும் பாராட்டுக்குள்ளானது. மலப்புரம் மாவட்டம், வெங்காரா பகுதியில் நடந்த மீட்புப்பணியின்போதுதான், ஜெய்ஷால் இவ்வாறு செயல்பட்டு பெண்களை மீட்டார். ஜெய்ஷால் குழுவினர், வெங்காரா பகுதியில் மட்டும் 17 குடும்பத்தைச் சேர்ந்த 250 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

கோழிக்கோட்டில் செயல்பட்டுவரும் Trauma care என்ற அமைப்பில் சேர்ந்து தன்னார்வத் தொண்டராக ஜெய்ஷால் பணியாற்றிவருகிறார். 2002-ம் ஆண்டு முதல், இப்போது வரை பல்வேறு மீட்புப்பணிகளில் ஜெய்ஷால் ஈடுபட்டுள்ளார். கராத்தேயில் பிளாக் பெல்ட் பெற்றவர். இவரின் மீட்புப் பணியைப் பாராட்டி மகிந்ரா நிறுவனத்தின் புதிய காரான மாரஸோ வழங்கப்பட்டது. கோழிக்கோட்டைச் சேர்ந்த மகிந்ரா நிறுவனத்தின் டீலர்  சார்பில் இந்த கார் வழங்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் மாரஸோ காரை வாங்கிய, அதுவும் பரிசாகப் பெற்ற முதல் நபர் ஜெய்ஷால்தான். கேரள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டி.பி. ராமச்சந்திரன், கார் சாவியை அவரிடத்தில் வழங்கினார். 

கார் பரிசு பெற்ற ஜெய்ஷால், ''எந்த விருதையும் பரிசையும் எதிர்பார்த்து மீட்புப் பணியில் ஈடுபடவில்லை. நான் என் கடமையை மட்டுமே செய்தேன்'' என்று தெரிவித்துள்ளார்.  கேரளா வெள்ளத்தின்போது, 3 ஆயிரம் மீனவர்கள் தங்கள் படகுகளுடன் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர், மீனவர்களின் பணியை வெகுவாகப் பாராட்டினர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!