29 நிமிட தாமதம்... பணி ஒதுக்கீடு செய்யாத யூ.பி.எஸ்.சி... விளாசிய டெல்லி உயர் நீதிமன்றம்!

29 நிமிடங்கள் கால தாமதமாக விண்ணப்பித்தார் என்பதற்காக அகில இந்தியப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) பணி ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்த, உயர்நீதிமன்றம் விளாசியிருக்கிறது.

29 நிமிட தாமதம்... பணி ஒதுக்கீடு செய்யாத யூ.பி.எஸ்.சி... விளாசிய டெல்லி உயர் நீதிமன்றம்!

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர் அனு குமாரி. பணிசெய்ய விரும்பும் பகுதியையும் பிரிவையும் தேர்ந்தெடுக்க ஆன்லைனில் விண்ணப்பித்தபோது, 29 நிமிடம் காலதாமதமாக விண்ணப்பித்தார் என்பதற்காக அகில இந்தியப் பணியாளர் தேர்வாணையம் (UPSC), அவருக்குப் பணி ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்தியிருக்கிறது. கஷ்டப்பட்டு வெற்றி பெற்றும் பணி ஒதுக்கீடு பெற முடியாத அனு குமாரி, டெல்லி நீதிமன்றத்தை அணுக, யூபிஎஸ்சி-யை விளாசியிருக்கிறது உயர் நீதிமன்றம்.

அனு குமாரி ஐஏஎஸ் உயர்நீதிமன்றம்

Pic Courtesy : ANI

ஹரியானா மாநிலம் சோனிபட் பகுதியில் நடுத்தர விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அனு குமாரி. இவரின் அப்பா சாதாரண கடைநிலை வேலையிலிருந்து ஓய்வுபெற்றவர். அனுக்கு 3 பேர் உடன்பிறந்தவர்கள். இளநிலை பட்டப்படிப்பாக இயற்பியலையும், முதுநிலை பட்டப்படிப்பாக எம்.பி.ஏ-வும் படித்திருக்கிறார். தனியார் நிறுவன வேலை இயந்திரத்தனமாக இருக்க, அந்த வேலையை விட்டுவிலகி சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகியுள்ளார். இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையையும் எதிர்கொண்டு, பயிற்சி மையங்களை நாடாமல் சொந்த முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார்.

அனு குமாரி முதன்முறையாகத் தேர்வு எழுதியதில்,  ஒரு மதிப்பெண்ணில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இரண்டாவது முறை எழுதியபோது அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார்.

2016-ம் ஆண்டு வரை சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வு எழுதும்போதே (Civil Services - Main Examination) பணிசெய்யும் விருப்பமுள்ள பிரிவுகளையும் பகுதியையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. சமீபத்தில், முதன்மைத் தேர்வு முடிவுக்குப் பிறகே, பணி செய்ய விரும்பும் பிரிவு, பகுதி குறித்த தகவலைத் தெரிவிக்க வேண்டும் என விதிமுறை மாற்றப்பட்டது. எனவே, தேர்வு முடிவு வெளியானதும், பணி செய்ய விரும்பும் பிரிவையும் பகுதியையும் அனு குமாரி, ஆன் லைனில் விண்ணப்பிக்க முயன்றார்.. அப்போது 29 நிமிடம் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதைக் காரணம் காட்டி அவரது விண்ணப்பத்தை ஏற்க மறுத்துள்ளது அகில இந்தியப் பணியாளர் தேர்வாணையம்.

யு.பி.எஸ்.சி அனு குமாரி ஐஏஎஸ்

இதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹீமா ஹோலி மற்றும் ரேகா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், `அனு குமாரியின் விருப்பத்தின் அடிப்படையில் அவருக்கு அகில இந்தியப் பணியாளர் தேர்வாணையம் பணி ஒதுக்கீடு செய்யவேண்டும்' என்று தீர்ப்பளித்தது. 

`அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்தவருக்கு, தகுந்த வாய்ப்பை வழங்காமல் இருண்ட சூழ்நிலையை உருவாக்கக் கூடாது. மிகுந்த கடினமான சூழ்நிலையிலேயே அனு குமாரி வெற்றிபெற்று அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார். அனு குமாரியின் வெற்றி, பல ஆயிரம் பெண்களுக்கு தன்னம்பிக்கையும் உற்சாகத்தையும் கனவுக்கான ஊக்கத்தையும் கொடுத்திருக்கிறது. இந்நிலையில் அவருக்கு இப்படியொரு இடர்ப்பாட்டை உருவாக்கலாமா?' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

`தற்போது 20 ஆண் ஐ.ஏ.எஸ் அதிகாரி பதவி வகிக்க, ஒரே ஒரு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற விகிதத்தில்தான் இருக்கிறார்கள். பணியிடத்தில் பாலினச் சமநிலையை, விகித முரண்பாட்டைக் களைய வேண்டும்' என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். 

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பயிற்சியில் இருக்கும் அனு குமாரி, உயர் நீதிமன்றத் தீர்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!