வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (10/09/2018)

கடைசி தொடர்பு:11:45 (10/09/2018)

சபரிமலை ஐயப்பன் கோயிலில் செப்டம்பர் 16-ம் தேதி நடை திறப்பு!

கேரளாவை புரட்டிப்போட்ட மழை வெள்ளத்துக்குப் பின்னர், சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடக்க உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை திருவாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயில்

கேரளாவில், கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக, பெரும் உயிர்ச்சேதமும் பொருள் சேதமும் ஏற்பட்டன. அந்தப் பாதிப்பில் இருந்து கேரள மக்கள் மெதுவாக மீண்டுவருகிறார்கள். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. கன மழையின்போது, பம்பா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

கனமழை காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோயிலையும் வெள்ளம் சூழ்ந்தது. சபரிமலையின் மூன்று ஆறுகள் சந்திக்கும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த திரிவேணி பாலம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. அதனால், அந்த இடத்தில் தற்காலிகப் பாலம் கோயில் நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் அருகில் உள்ள இடங்களையும் வெள்ளம் பாழ்படுத்தியது. அந்த இடங்களும் கோயில் நிர்வாகத்தின் சார்பாக அவசரமாகச் சரிசெய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், வரும் 16-ம் தேதி மலையாள மாதமான கன்னி மாதம் தொடங்குகிறது. அதனால், வழக்கமான நடைமுறைப்படி சிறப்பு பூஜைகளை மேற்கொள்வதற்காக,  ஐயப்பன் கோயிலின் நடை 16-ம் தேதி  திறக்கப்படுகிறது. அன்று மாலை கோயிலின் நடை திறக்கப்பட்டு, கோயிலின் தலைமைத் தந்திரி கண்டராரு ராஜீவரு கன்னிமாச பூஜைகளை நடத்துகிறார். மறுநாள் முதல், தந்திரிகள் பங்கேற்று ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம், உதயஸ்தமனா பூஜை, படிபூஜை, கலபாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளை நடத்துவார்கள். 

அதைத் தொடர்ந்து, 21-ம் தேதி கோயிலின் நடை சாத்தப்படும். பின்னர், ஆகஸ்ட் மாதத்தில் மழைப்பொழிவு இருக்கும் சமயத்தில், மலையாளத்தின் சிங்கம் மாதப் பிறப்பின்போது மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்பட்டு, வழக்கம்போல சிறப்புப் பூஜைகள் நடைபெறும். தற்போது மழைபெய்து சாலைகள் அனைத்தும் மோசமான நிலச்சரிவைச் சந்தித்துள்ள நிலையில், பக்தர்கள் அனைவரும் வாகனப் பயணத்தின்போது பாதுகாப்பான முறையில் பயணம்செய்து வருமாறு தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது.