சட்டசபைத் தேர்தல் எதிரொலி! - பெட்ரோல் மீதான வரியை அதிரடியாகக் குறைத்த முதல்வர் வசுந்தரா ராஜே. | rajasthan government announced a four-per cent reduction in value added tax

வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (10/09/2018)

கடைசி தொடர்பு:12:05 (10/09/2018)

சட்டசபைத் தேர்தல் எதிரொலி! - பெட்ரோல் மீதான வரியை அதிரடியாகக் குறைத்த முதல்வர் வசுந்தரா ராஜே.

ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைத்துள்ளது, அம்மாநில அரசு. இதனால், 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.2.50 காசுகள் குறைந்துள்ளன.

எரிபொருள் விலை குறைப்பு

ராஜஸ்தானில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடந்துவருகிறது. இங்கு, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை (மதிப்புக்கூட்டு வரி)க் குறைப்பதாக முதல்வர் அறிவித்தார். இந்த நடைமுறை நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. 

அதாவது, பெட்ரோலுக்கு விதிக்கப்பட்ட வாட் வரியில், 30-ல் இருந்து 26 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, டீசலுக்கு விதிக்கப்பட்ட வாட் வரியில் 22-ல் இருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் மீதான வாட் வரியில் 4 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதால், மாநிலத்தில் விற்பனையாகும் 1 லிட்டர் பெட்ரோல் விலையில் ரூ.2.50 காசுகள் குறைத்துள்ளன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, காங்கிரஸ் இன்று நாடுதழுவிய முழு அடைப்புப் போராட்டத்தை நடத்திவருகிறது. இந்நிலையில், பா.ஜ.க ஆட்சிசெய்யும் மாநிலத்தில் எரிபொருள் விலையைக் குறைத்திருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அதே நேரத்தில், ராஜஸ்தான் மாநிலத்தின் சட்டசபைத் தேர்தல், இந்த ஆண்டு இறுதியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.