வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (10/09/2018)

கடைசி தொடர்பு:15:45 (10/09/2018)

``அனைத்து டோல் கேட்டிலும் ஃபாஸ்ட்டேக் வசதி” - டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் ஒன்றுகூடும் 58 வது  SIAM நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்னும் 4 மாதங்களில் இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளில் உள்ள லேன்களிலும் ஃபாஸ்ட்டேக்(FastTag) வசதி வரப்போவதாகத் தெரிவித்தார்.

ETC ஃபாஸ்ட்டேக் கொண்ட டோல்

இந்தியாவில் மொத்தம் 462 சுங்கச்சாவடிகள் உள்ளன. தற்போது ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் இரண்டு லேன்களில் மட்டுமே ஃபாஸ்ட்டேக் வசதி உள்ளது. இதில் பல சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் வசதி இல்லாததால் 10 முதல் 15 சதவிகித மக்கள் மட்டுமே இதைப் பயன்படுத்துகிறார்கள். ஃபாஸ்ட் டேக் லேன் இருந்தால் டோல் கேட்டில் வாகனங்களின் காத்திருப்பு நேரம் குறையும். காத்திருந்து பொறுமையாக நகர்ந்து போகத் தேவையில்லாததால் பெட்ரோல்-டீசல் வீணாவதும் பெருமளவு குறையும்.

ஃபாஸ்ட் டேக் என்பது 'ரேடியோ ஃப்ரீக்குவென்சி ஐடன்டிஃபிகேஷன் (RFID)' எனும் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. இந்த RFID ஸ்டிக்கரை வாகனத்தின் வின்டுஷீல்டில் ஒட்டிவிடுவார்கள். வாகனம் ஃபாஸ்ட் டேக் லேனை கடந்துபோகும்போது இதில் இருந்து தானாகவே பணம் எடுத்துக்கொள்ளப்படும். சுங்கச்சாவடியில் நின்று பணம் செலுத்தத் தேவையில்லை. பணம், டெபிட், கிரெடிட் போன்றவை தேவையில்லை. நம் ஃபாஸ்ட் டேக் கணக்கில் பணத்தை ரீசார்ஜ் செய்துகொள்ள வேண்டும். ஐந்து ஆண்டுகள் வரை ஒரு ஃபாஸ்ட் டேக் கணக்கைப் பயன்படுத்தலாம். தற்போது இந்த ஃபாஸ்ட்டேக் SBI, hdfc, ICICI, Axis போன்ற வங்களில் கிடைக்கிறது. இதை Paytm இணையதளம் மூலமும் மத்திய அரசின்  NHAI இணையதளத்தின் மூலமும்கூட வாங்கலாம். 

ஃபாஸ்ட்டேக் இல்லாத டோல்

இந்த அறிவிப்பின்போது நிதின் கட்கரி கமர்ஷியல் வாகனங்களுக்குக் கட்டாய வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்தும் சட்டத்தையும் நீக்கப்போவதாகக் கூறியுள்ளார். மேலும், Biofule, CNG மற்றும் மின்சார வாகனங்களுக்கு எந்தப் பர்மிட்டும் தேவையில்லை என்று புதிய சட்டமும் கொண்டுவரப்போவதாகக் கூறியுள்ளார். ஆனால், வாகனங்களுக்கான இந்தப் புதிய சட்டம் எப்போது வரும் என்பதைத் தெளிவுபடுத்தவில்லை.