`டயல் பண்ணுங்க; அரசாங்கமே வீடு தேடி வரும்’ - கெஜ்ரிவால் தொடங்கிய அசத்தல் திட்டம்

திருமணச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 40 வகையான அரசு சேவைகளை, வீட்டுக்கே வந்து வழங்கும் திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தொடங்கி வைத்தார். 

டெல்லி முதல்வர்

மக்கள் நலனுக்கான அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆளுநர் தடையாக இருக்கிறார் என்று டெல்லி ஆளுநர்மீது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சுமத்தியிருந்தார். இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது. இதையடுத்து, அரசின் திட்டங்களுக்கு ஆளுநர் தடையாக இருக்கக் கூடாது என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு கடந்த ஜூலை மாதத்தில்  தீர்ப்பு வழங்கியது. முன்னதாக, ரேஷன் பொருள் விநியோகத்தில் நடக்கும் ஊழலைத் தடுக்க பயனாளர்களின் வீட்டுக்கே ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் திட்டத்தை அண்மையில் தொடங்கினார் கெஜ்ரிவால். இந்த நிலையில், திருமணச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், புதிய குடிநீர் இணைப்பு உட்பட 40 வகையான அரசு சேவைகளை, வீட்டுக்கே வந்து வழக்கும் திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தொடங்கி வைத்தார். 

இந்த சேவைகளைப் பெற விரும்புவோர் இணையதளத்தில் விண்ணப்பித்திருக்க வேண்டும். மேலும், கூடுதலாக 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். இத்திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய கெஜ்ரிவால், `பீட்சா மட்டுமே வீடுதேடி வரும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால், தற்போது ஒரு டயல் செய்தால்போதும்; அரசாங்கமே வீடு தேடி வரும். வரலாற்றில் டெல்லி அரசு ஏற்படுத்தியுள்ள புரட்சி இது' என்று கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!