வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (10/09/2018)

கடைசி தொடர்பு:17:00 (10/09/2018)

`பா.ஜ.க-வின் பேச்சு, மிகச் சிறந்த நகைச்சுவை!' - பெட்ரோல் விலை உயர்வு குறித்து சிதம்பரம்

`பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு பொறுப்பில்லை என்று பா.ஜ.க கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது' என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். 

ப.சிதம்பரம்

நாட்டில், கடந்த சில தினங்களாகப் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தினமும் புதிய உச்சத்தைக் கண்டுவரும் எரிபொருளின் விலையைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நாடுதழுவிய முழு அடைப்புப் போராட்டம் இன்று நடந்து வருகிறது. காங்கிரஸுடன், எதிர்க்கட்சிகளும் இணைந்து பாரத் பந்துக்கு ஆதரவு அளித்துள்ளன. இந்த நிலையில், எரிபொருள் விலையேற்றத்துக்கு மத்திய அரசு காரணம் இல்லை என பா.ஜ.க-வைச் சேர்ந்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இதை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், `பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதித்துள்ள கொடுமையான வரிகள்தான் விலை உயர்வுக்குக் காரணம் என்பதைச் சிறு பிள்ளைகள்கூட அறிவார்கள். ஆனால், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசு பொறுப்பில்லை என்று பா.ஜ.க கூறுவது இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவையாக உள்ளது. ஜி.எஸ்.டி வரி முறையின்கீழ், பெட்ரோல், டீசல் பொருள்களைக் கொண்டு வருவதற்கு ஏன் மத்திய அரசு முரட்டுத்தனமாக மறுக்கிறது. கச்சா எண்ணெய் விலை 107 டாலராக இருந்தபோது, பெட்ரோல் விலை குறைந்தது. இப்பொழுது கச்சா எண்ணெய் விலை 78 டாலராக இருக்கும்போது விலை உயர்ந்துள்ளது ஏன்' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.