`கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் விலை உயர்ந்தது ஏன்’ - பா.ஜ.க - காங்கிரஸ் ட்விட்டர் போர்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து, காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிடும் வகையில் பா.ஜ.க., சார்பில் தெரிவிக்கப்பட்ட புள்ளி விவரத்துக்கு, காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

பாரதிய ஜனதாக் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பான இன்போ கிராபிக்ஸ் விகிதாச்சார வரைபடம் ஒன்று பதிவிடப்பட்டது. `பெட்ரோலிய விலை உயர்வின் உண்மைகள்” என்று அதற்கு தலைப்பிடப்பட்டுள்ளது. கடந்தாண்டுகளில், ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வீழ்ச்சியை மையமாகக் கொண்டு அந்த இன்ஃபோகிராப் உருவாக்கப்பட்டிருந்தது. 2004- 2009 இடைப்பட்ட ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை 75.8 சதவிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2014-18 இடையிலான பி.ஜே.பி ஆட்சியில் 13 சதவிகிதம் மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பா.ஜ.க

பி.ஜே.பியின் இந்தத் தகவலுக்கு அதேபாணியில் மற்றொரு இன்ஃபோகிராப் மூலம் காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்திருக்கிறது. அதில், பெட்ரோல் விலை உயர்வையும், அதே காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரங்களையும் ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சி புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. எங்களது ஆட்சிக் காலத்தில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்ததால், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினோம். ஆனால், தற்போதைய ஆட்சிக் காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 34 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில், 13 சதவிகிதம் அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை ஏன் உயர்த்தப்பட்டது என்று கேள்வி எழுப்பும் வகையில் அந்த வரைபடம் அமைந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!