முதல்நாளிலேயே 21,000 அழைப்பு - ஸ்தம்பித்த டெல்லி அரசின் வீடு தேடி வரும் அரசு சேவை!

தொலைபேசியில் அழைத்தால் அரசு சேவைகள் வீடு தேடி வரும் என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது டெல்லி அரசு. முதல் நாளில் இருபதாயிரதுக்கும் கூடுதலாக தொலைபேசி அழைப்புகளால் மக்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் தடுமாறி இருக்கிறது

பல்வேறு அரசு சேவைகள் வீடு தேடி வரும் என்று அறிவித்துள்ளது டெல்லி அரசு.  இந்தத் திட்டத்தின் தொடக்கவிழா நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே 21,000 அழைப்புகள் வந்ததால் திக்குமுக்காடி இருக்கிறது டெல்லி அரசு.

அரசு சேவைகள்

தொலைபேசியில் அழைத்தால் அரசு சேவைகள் வீடு தேடி வரும் என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு. நேற்று (10.09.2018) தொடங்கிய இந்தத் திட்டத்தில், ஒரே நாளில் 21,000 அழைப்புகளால் தொலைபேசி சேவையை ஸ்தம்பிக்க வைத்தனர் டெல்லி மக்கள். குறைவான பணியாளர்களே இருந்ததால் மக்களின் அழைப்புக்குச் சரியான பதிலளிக்க முடியாமல் தடுமாறியுள்ளது டெல்லி அரசு. முதல் நாளில் 21,000 அழைப்புகளில் 1,200 அழைப்புகளுக்கு மட்டும் பதிலளித்திருக்கின்றனர். இதில், 369 அழைப்புகளுக்கு மட்டும் அதிகாரிகள் நேரில் வருவார்கள் என்று உறுதியளித்துள்ளனர். 

வீடு தேடி வரும் திட்டத்தின் கீழ், திருமணச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், புதிய குடிநீர் இணைப்பு உட்பட 40 வகையான சேவைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய டெல்லி முதல்வர், 'உணவுப்பொருள்கள் மட்டும் வீடுதேடி வருவதைப் போலவே, இனி டயல் செய்தால் அரசாங்க சேவையே வீடு தேடி வரும்" என்றார். ஆனால், திட்டம் தொடங்கிய முதல்நாளில் பெரிய அளவில் எந்தவிதமான சேவையும் சென்று சேரவில்லை. 

முதல் நாளில், விண்ணப்பித்த ஏழு பேரிடமிருந்து தேவையான விவரங்களை மட்டுமே பெற்றுக்கொண்டிருக்கின்றனர் அரசு அதிகாரிகள். முதல் நாளில் ஏகப்பட்ட அழைப்புகளால், இரண்டாவது நாளில் மக்களின் அழைப்புகளுக்குப் பதிலளிக்கும் வகையில் கூடுதல்  பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!