எகிறும் பெட்ரோல், டீசல் விலை - ஆறுதல் அளிக்கும் நடவடிக்கை எடுத்த ஆந்திர அரசு! | Andra Pradesh CM Chandra Babu Naidu announced petrol, diesel fuel price reduced two rupees per litre

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (11/09/2018)

கடைசி தொடர்பு:07:33 (11/09/2018)

எகிறும் பெட்ரோல், டீசல் விலை - ஆறுதல் அளிக்கும் நடவடிக்கை எடுத்த ஆந்திர அரசு!

மற்ற மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள் குறைப்பால், தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. விலையைக் குறைப்பது குறித்து மத்திய அரசு எந்த விதமான தகவலையும் வெளியிடாமல் இருக்கிறது. இந்த நிலையில், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, 'ஆந்திராவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைக்கப்படும்" என்று அறிவித்திருக்கிறார்.

பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் அதிகரித்து வருகிறது. இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு நாள் பந்த் அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு  எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இந்த நிலையில், மத்திய அரசிடமிருந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பது குறித்து எந்தவிதமான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. மாநில அரசுகளே பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்தால் மட்டுமே விலையைக் கட்டுக்குள் வைக்க முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. 

நேற்று முன் தினம் (9.9.2018) ராஜஸ்தான் மாநில அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் மீதான வரியை நான்கு சதவிகிதம் குறைத்திருக்கிறது. நேற்று (10.09.2018), ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, 'பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைக்கப்படும். விலை குறைப்பு 11.09.2018 முதல் அமல்படுத்தப்படும்" என்று அறிவித்துள்ளார். 

மற்ற மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள் குறைப்பால், தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.