வெளியிடப்பட்ட நேரம்: 04:20 (11/09/2018)

கடைசி தொடர்பு:07:16 (11/09/2018)

உங்கள் தினசரி செலவீனங்களைக் குறையுங்கள் - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பா.ஜ.க அமைச்சர் அட்வைஸ்

தினமும் அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைச் சமாளிக்க, பொதுமக்கள் தங்களுடைய தினசரி செலவினங்களை குறைத்துக்கொள்ள வேண்டும்" என்று ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜ்குமார் ரின்வா ஆலோசனை வழங்கி இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

பெட்ரோல் டீசல் விலை

தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதனால், அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயர்ந்து ஏழை எளிய, நடுத்தர மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உருவாகி இருக்கிறது. இதுவரை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து மத்திய அரசு எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடாமல் இருக்கிறது. மாநில அரசுகளே பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன.

நேற்று முன்தினம் (9.9.2018), ராஜஸ்தான் மாநில அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியில் நான்கு சதவிகிதத்தைக் குறைத்திருக்கிறது. வரி குறைப்புக்கு பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜ்குமார் ரின்வா, ``சர்வதேச சந்தையே எரிபொருளின் விலையை நிர்ணயிக்கின்றன. இந்தியாவில் பெட்ரோல், டீசல் பயன்பாடு அதிகமாக இருப்பதாலேயே விலையும் அதிகமாக உள்ளது. விலை உயர்வைச் சமாளிக்க, மக்கள் தங்கள் தினசரி செலவினங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும்" என்றார். இவரது பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.