பெரு வெள்ளத்துக்கான காரணம் என்ன? - கேரளாவின் குற்றச்சாட்டை மறுத்த நீர் வள ஆணையம்! 

கேரள வெள்ளத்துக்கு அதிக மழைபொழிவே காரணம், அணைகள் திறப்பல்ல என மத்திய நீர் வள ஆணையம் தெரிவித்துள்ளது. 

கேரளா

100 ஆண்டுகள் கண்டிராத பிரளயத்தில் இருந்து கேரள மாநிலம் மீளத்துவங்கியுள்ளது. வெள்ளப் பாதிப்புகளுக்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக வெள்ளப் பாதிப்புக்கு தமிழகமும் ஒரு காரணம் எனக் கேரள அரசு குற்றம் சாட்டியிருந்தது. இதுகுறித்த உச்ச நீதிமன்ற வழக்கிலும், ``சரியான நேரத்தில் முறையாக, கவனமாக முல்லைப்பெரியாறு அணையின் நீரைத் திறந்து விட்டிருந்தால் கேரள வெள்ள பாதிப்பை பெருமளவு குறைத்திருக்க முடியும். அணையின் நீர்மட்டம் தொடர்பாக தமிழக அரசிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் இடுக்கி அணைக்குக் கூடுதலாக தண்ணீர் வந்தது. 

எனவே, இடுக்கி அணையில் இருந்து அதிக தண்ணீர் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழக அரசு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து உரிய முறையில் தண்ணீர் திறந்திருந்தால் இடுக்கி அணையில் இருந்து அதிக தண்ணீர் திறக்கப்பட்டு வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்காது" எனவும் குறிப்பிட்டது. கேரள அரசின் இந்தக் குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், கேரளாவின் இந்தக் குற்றச்சாட்டை தமிழகம் மறுத்தது. இந்த நிலையில், கேரள வெள்ளத்துக்கு அதிக மழைபொழிவே காரணம், அணைகள் திறப்பல்ல என மத்திய நீர் வள ஆணையம் தெரிவித்துள்ளது. 

கேரளா

இதுகுறித்து நீர் வள ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``பெரு வெள்ளம் ஏற்பட்டதற்கு அதிக அளவிலான மழைபொழிந்ததே காரணம். அணைகள் திறக்கப்பட்டது காரணம் அல்ல. அணைகளின் மூலமாக வெள்ளம் கட்டுப்படுத்தவேப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 15 - 17ம் தேதிக்குள் அதாவது மூன்று நாள்களுக்குள் கேரளாவில் 433 டிஎம்சி அளவுக்கு மழைப்பொழிவு இருந்துள்ளது. கேரளாவில் உள்ள அணைகளின் கொள்ளளவு 5.8 பிசிஎம் மட்டுமே. ஆனால், மூன்று நாள்கள் பெய்த மழைப்பொழிவு மட்டும் 12 பிசிஎம் அளவு. அணைகள் அதிகமான நீரை வெளியேற்றவில்லை. இதேபோன்ற ஒரு அதிகப்படியான மழைப்பொழிவு 1924ல் பெய்துள்ளது. அதன்பிறகு இப்போது பெய்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கேரள அரசிடமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!