உத்தரவை மீறி கட்டணம் வசூல்!- சி.பி.எஸ்.இ 6 வாரம் கெடு விதித்த உச்சநீதிமன்றம்

10 மற்றும் 12-ம் வகுப்பு விடைத்தாள்களைப் பெறுவதற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில் சி.பி.எஸ்.இ-க்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்சநீதிமன்றம். 

உச்சநீதிமன்றம்

10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தங்களின் திருத்தப்பட்ட பொதுத்தேர்வு விடைத்தாள் நகலைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ளலாம் எனக் கடந்த 2011-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், இதற்குச் சட்டத்தில் எவ்வளவு பணம் வசூலிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதோ அந்தத் தொகை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பத்தாம் வகுப்பு விடைத்தாளுக்கு 1,000 ரூபாயும், 12-ம் வகுப்பு விடைத்தாள் நகலுக்கு 1,200 ரூபாயும் கட்டணமாக செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம் என சி.பி.எஸ்.இ அறிக்கை வெளியிட்டது.

இந்த அறிக்கையைக் குறிப்பிட்டு, உச்ச நீதிமன்றம் தெரிவித்த உத்தரவை மீறி அதிக கட்டணம் வசூலிப்பதாக சி.பி.எஸ்.இ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், கே.எம் ஜோசப், நவீன் சின்ஹா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் நீதிமன்ற உத்தரவை மீறிச் செயல்பட்டதாக சி.பி.எஸ்.இ-க்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் இதற்கு 6 வாரத்துக்குள் பதிலளிக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!