`குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை!’ - வங்கி மோசடிப் புகாரை மறுக்கும் மெஹுல் சோக்ஸி

பிஎன்பி  வங்கி மோசடியில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் மெஹுல் சோக்ஸி, ``அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை'' என்று தெரிவித்துள்ளார். 

பிஎன்பி வங்கி மோசடியின் முக்கிய குற்றவாளி மெஹுல் சோக்ஸி

பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரது நெருங்கிய உறவினரும், கீதாஞ்சலி நகை நிறுவன அதிபருமான மெஹுல் சோக்ஸியும் சேர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் உத்தரவாத கடிதம் பெற்று, 13,000 கோடி ரூபாய் கடன்  மோசடிசெய்தது தொடர்பாக, அவர்கள்மீது சி.பி.ஐ-யும், அமலாக்கப்பிரிவு இயக்குநரகமும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது. இதனிடையே, நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி ஆகியோர் குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டனர். அவர்களைத் திரும்பவும் இந்தியா கொண்டுவர முயற்சிகள் நடந்துவருகின்றன.

இந்நிலையில், அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை எனவும், அடிப்படை ஆதாரமற்றவை எனவும் மெஹுல் சோக்ஸி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மெஹுல் சோக்ஸி பேசும் வீடியோவை ஏ.என்.ஐ வெளியிட்டுள்ளது. 

அந்த வீடியோவில், `பாஸ்போர்ட் அதிகாரிகள் எனது பாஸ்போர்ட்டை முடக்கியுள்ளனர். பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து கடந்த பிப்ரவரி 16-ம் தேதியன்று  எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், பாதுகாப்பு அச்சுறுத்தலின் காரணத்தால் என் பாஸ்போர்ட் இடைநீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பாஸ்போர்ட்டை இடைநீக்கம் செய்ய வேண்டாம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மும்பை பாஸ்போர்ட் அலுவலகத்துக்குக் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி மின்னஞ்சல் அனுப்பினேன். இருப்பினும், பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து எனக்கு எந்தப் பதிலும் இதுவரை கிடைக்கவில்லை. எதற்காக எனது பாஸ்போர்ட்டை முடக்கினார் என்று சரியான விளக்கத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. அடிப்படை ஆதாரமற்றவை' எனப் பேசியுள்ளார். இந்த வீடியோ ஆதாரத்தின்மூலம் மெஹுல் சோக்ஸி, கரீபியன் தீவுகளில் உள்ள ஆண்டிகுவாவில் தங்கியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!