`பெட்ரோல் வாங்கினால் பைக், வாஷிங் மெஷின், செல்போன் பரிசு!’ - பங்க் உரிமையாளர்கள் விளம்பரம்

பெட்ரோல் அல்லது டீசல் வாங்கினால் பைக், வாஷிங் மெஷின், ஏ.சி போன்ற பல பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என மத்தியப்பிரதேசம் முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல்

இந்தியாவிலேயே பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அதிக வாட் வரி விதிக்கும் மாநிலமாக மத்தியப் பிரதேசம் உள்ளது. தற்போது பெட்ரோல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தை நோக்கி உள்ளதால் தங்களின் வியாபாரத்தைக் கண்டு அச்சமடைந்துள்ளனர் அம்மாநில பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள். இதனால் மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் அல்லது டீசல் வாங்கினால் இருசக்கர வாகனம், ஏ.சி, வாஷிங் மெஷின், லேப்டாப், செல்போன் போன்ற பல பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என அங்குள்ள பெட்ரோல் பங்குகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

அதன் படி 5,000 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் செல்போன், இருசக்கர வாகனம் அல்லது கைக்கடிகாரம் இலவசமாக வழங்கப்படும். 15,000 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் ஒரு அலமாரி, சோஃபா செட் அல்லது 100 கிராம் வெள்ளி நாணயம் இலவசம். அதுவே 25,000 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் வாஷிங் மெஷின் இலவசம் என்றும் 50,000 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் ஏ.சி அல்லது லேப்டாப் இலவசமாக வழங்கப்படும். இதன் உச்சமாக ஒரு லட்சம் லிட்டர் பெட்ரோல் வாங்கினால் ஸ்கூட்டர் அல்லது மோட்டார் பைக் போன்றவை இலவசமாக வழங்கப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 100 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் சில சலுகைகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய பிரதேசத்தில் டீசல் மீதான வாட் வரி 22 சதவிகிதமாகவும், பெட்ரோல் மீதான வாட் வரி 27 சதவிகிதமாகவும் உள்ளது. தற்போது விலை ஏற்றத்தினால் தங்கள் மாநிலத்தில் வாட் வரியைக் குறைக்க வேண்டும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொருள்களை இலவசமாகப் பெற குறிப்பிட்ட காலத்துக்கு ஒரே இடத்தில் பெட்ரோல் வாங்க வேண்டுமா அல்லது ஒரே நேரத்தில் முழுவதுமாக வாங்க வேண்டுமா போன்ற எந்தத் தகவல்களையும் அவர்கள் குறிப்பிடவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!