ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது - மத்திய உள்துறை தகவல் | Governor has no power to release Rajiv Gandhi Rajiv Gandhi assassination case prisoners, say home ministry officials

வெளியிடப்பட்ட நேரம்: 07:34 (12/09/2018)

கடைசி தொடர்பு:07:34 (12/09/2018)

ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது - மத்திய உள்துறை தகவல்

ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுப்பதற்கு முன்பு மத்திய சட்டத்துறையிடமும், உள்துறை அமைச்சகத்திடமும் ஆலோசனை பெற வேண்டும்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ஏழு பேரை விடுதலை செய்வது குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

 ஏழு பேரின் விடுதலை தமிழக ஆளுநர் முடிவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், நளினி, முருகன், ராபர்ட் பாயஸ், சாந்தன், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயகுமார் ஆகியோரை விடுதலை செய்ய ஆளுநருக்குப் பரிந்துரை செய்துள்ளது தமிழக அமைச்சரவை. ஆனால், ஏழு பேரின் விடுதலை செய்து குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து கருத்துதெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி, 'ஏழு பேரின் விடுதலைக் குறித்து ஆளுநர் முடிவெடுப்பதற்கு முன்பு மத்திய சட்டத்துறையிடமும், உள்துறை அமைச்சகத்திடமும் ஆலோசனை பெற வேண்டும். மத்திய புலனாய்வு பிரிவு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரணை செய்தது. ஆகையால், ஆளுநர்  தமிழக அரசின் பரிந்துரையை ஏற்கவோ அல்லது மறுக்கவோ மத்திய அரசிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம். சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வெளிநாட்டு சதி உள்ளது என்பதைத் தெரிவித்து, இது குறித்து வெளிநாட்டில் விசாரணை  நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது சி.பி.ஐ. 

மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 435-யின் படி, குற்றவாளிகளை விடுவிக்க மத்திய அரசுடன் ஆலோசனை பெற்ற பிறகே மாநில அரசு பரிந்துரை செய்ய முடியும். ஆகையால், மாநில அரசின் பரிந்துரை குறித்து ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது" என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.