வெளியிடப்பட்ட நேரம்: 07:02 (12/09/2018)

கடைசி தொடர்பு:07:16 (12/09/2018)

மாணவிகளின் கருப்பு நிற துப்பட்டாக்களை பறித்த காவல்துறையினர் - முதல்வர் நிகழ்ச்சியில் பரபரப்பு!

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்த கல்லூரி மாணவிகள் அணிந்திருந்த கருப்பு நிற துப்பட்டாக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

சிவராஜ் சிங் சவுகான்

மத்தியப் பிரதேச மாநிலம் பெடுல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் முல்டாய் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிதரகூட் கிராமோதயா விஷ்வ வித்யாலயாவை சேர்ந்த கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சில மாணவிகள் கருப்பு நிற துப்பட்டாக்களை அணிந்துவந்திருந்தனர். கருப்பு நிற துப்பட்டாக்களைப் பார்த்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து துப்பட்டாக்களை வலுக்கட்டாயமாக வாங்கினர். நிகழ்ச்சி முடிந்ததும் திரும்பத் தருவதாக தெரிவித்துள்ளனர். சிவராஜ் சிங் சவுகான் பேசும்போது, எதிர்ப்பு தெரிவிப்பதற்காக கருப்பு கொடியாக பயன்படுத்தி விடுவார்களோ என்ற பயத்தில் காவல்துறையினர் துப்பட்டாக்களை வாங்கி வைத்துள்ளனர் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை பா.ஜ.க மறுத்துள்ளது. நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என பாஜக எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். காவல்துறையினரின் இந்தச் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.