வெளியிடப்பட்ட நேரம்: 05:50 (12/09/2018)

கடைசி தொடர்பு:05:50 (12/09/2018)

ராஜஸ்தான், ஆந்திராவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

மேற்கு வங்காள மாநிலத்தில், ``பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைக்கப்படும்" என்று அறிவித்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. 

பெட்ரோல் டீசல் விலை மம்தா பானர்ஜி

நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது பெட்ரோல், டீசல் விலை. மத்திய அரசு, விலை குறைப்பு குறித்து எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், ராஜஸ்தான் மாநில அரசு நான்கு சதவிகித வரியைக் குறைத்திருக்கிறது. ஆந்திர அரசு, பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் விலை குறைத்துள்ளது. நேற்று (11.09.2018), மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ``பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைக்கப்படும்"  என்று அறிவித்துள்ளார்.

விலை குறைப்புக்கு பின்னர் பேசிய மம்தா பானர்ஜி, ``சர்வதேச அளவில் கச்ச எண்ணெய்யின் விலை குறைவாக இருக்கிறது. ஆனால், மத்திய அரசு கலால் வரியை ஒன்பது முறை உயர்த்தியுள்ளது. இதனாலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக உள்ளது. உடனடியாக கலால் வரியைக் குறைத்து விலையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்" என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார் மம்தா பானர்ஜி.