கேரள வெள்ளத்தில் 35 பேர் உயிரைக் காப்பாற்றியவர் பார்வை இழந்த பரிதாபம்!

கேரள வெள்ளத்தில் சிக்கித் தவித்த 35 பேர் உயிரைக் காப்பாற்றிய சதாசிவன் என்பவருக்குக் கண் பார்வை பறிபோனது. 

கேரளா வெள்ளத்தில் மீட்புப்பணியின் போது பார்வை இழந்தவர்.

pic courtesy: mathrubhumi

கேரள வெள்ளத்தின்போது செங்கானுர் பகுதி முற்றிலும் தண்ணீரில் தத்தளித்தது. ஆகஸ்ட் 15-ம் தேதி இரவில் செங்கானுரைச் சேர்ந்த சதாசிவனுக்கு அவரின் நண்பர் சந்தோஷிடமிருந்து போன் வந்தது. `கீழ் செரிமேல் பகுதியில் தன் குடும்பம் உள்ளிட்ட 35 பேர் வெள்ளத்தில் தவிப்பதாகக் கூறி எப்படியாவது காப்பாற்றுங்கள்' என்று கெஞ்சியுள்ளார். பதறியபடி ஓடிய சதாசிவன் வெள்ளத்தில் தவித்தவர்களை தன் நண்பர்கள் உதவியுடன் காப்பாற்றினார். சதாசிவனும் நண்பர்களும் இரவு முழுவதும் போராடி 35 பேரையும் வெள்ளத்திலிருந்து மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வந்தனர். மீட்புப் பணியின்போது கூர்மையான கட்டை ஒன்று சதாசிவனின் வலது கண்ணில் குத்தியது. கண்ணிலிருந்து ரத்தம் வழிய உடனடியாக செங்கானுர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆலப்புழை அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது, கண் நரம்பு பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. `முறையான சிகிச்சை எடுக்கவில்லை என்றால் இடது கண் மட்டுமல்ல வலது கண்ணும் பாதிக்கப்படும்' என்று மருத்துவர்கள் சதாசிவனை எச்சரித்தனர். 

சாதாரண டீ வியாபாரம் செய்து வந்த சதாசிவன் மேற்கொண்டு சிகிச்சை எடுக்க முடியாமல் தவித்துள்ளார். தன் நிலையை யாரிடம் கூறவும் இல்லை. மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வந்த சதாசிவன் சிகிச்சை எடுக்காத காரணத்தினால் கண் பார்வையை முற்றிலும் இழந்தார். இவரின் மூத்த மகன் படிப்பு முடித்து வேலை தேடிக் கொண்டிருக்கிறார். இன்னொரு மகன் 10-ம் வகுப்பு படிக்கிறார். இவருக்குப் பேச்சு வாராது. மூன்றாவதாக ஆர்யா என்ற மகள் உள்ளார்.

சதாசிவன் கண் பார்வை இழந்திருப்பதால் குடும்பம் செய்வதறியாது தவித்து வருகிறது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சதாசிவனுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து உதவி அளிக்கும் படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!