வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (12/09/2018)

கடைசி தொடர்பு:12:40 (12/09/2018)

`அன்றே மோசடிப் புள்ளிகளின் பட்டியலை பிரதமருக்கு அனுப்பினேன்’- ரகுராம் ராஜன்

`ரிசர்வ் வங்கியின் கவர்னராக நான் இருந்தபோது பண மோசடி செய்பவர்களின் பட்டியலை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியிருந்தேன்’ என ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். 

ரகுராம் ராஜன்

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் இருந்தபோது செயல்படுத்தியவைக் குறித்து நாடாளுமன்றக் குழுவுக்கு அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். இந்த அறிக்கையில் அவர் பல்வேறு முக்கியத் தகவல்களையும் நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்கான சில வழிகளையும் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ரகுராம் ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``அதீத நம்பிக்கையும், மத்திய அரசின் மந்தமான போக்கு, குறைந்த வளர்ச்சியுமே வாராக் கடன் பிரச்னைக்கு முக்கியக் காரணமாக இருந்தது. பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்யும் தொகை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. நான் ரிசர்வ்  வங்கியின் கவர்னராக இருந்தபோது பண மோசடி செய்பவர்களை கண்காணிக்கும் அமைப்பு ஒன்றை உருவாக்கி பண மோசடிகளில் ஈடுபட்ட அதிமுக்கியப் புள்ளிகளின் பெயர் விவரப் பட்டியலை தயாரித்து பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பினேன். ஆனால், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற விவரங்கள் எனக்குத் தெரியவில்லை. 

அரசுத் திட்டங்கள் தொடங்கி, பிறகு நிறுத்தப்பட்டதன் மூலம் நாட்டின் செலவினங்கள் அதிகரித்தது. நாட்டில் அதிக மின் பற்றாக்குறை இருந்த போதிலும் பணியில் இல்லாத பல மின் உற்பத்தி நிலையங்கள் இருந்தன. இது அரசின் மந்த நிலையையும் முறையாகத் திட்டமிடாத தன்மையையுமே காட்டுகிறது. 2006-2008 போன்ற காலகட்டத்தில்தான் அதிக வாராக்கடன்கள் உருவாகின. ஆனால், அப்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி வலுவாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில்தான் வங்கிகளும் தவறு செய்துகொண்டிருந்தன. பல வங்கிகள் தனித்த ஆய்வில் ஈடுபடாமல் முதலீட்டு வங்கிகளின் அறிக்கைகளை வைத்தே கடன் வழங்க முடிவு செய்தது. இதற்குத் தீர்வாக  பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும். செயலில் இல்லாத திட்டங்களைக் குறைக்க வேண்டும். மீட்புத் திட்டங்களை வலுப்படுத்துவதோடு பொதுத்துறை வங்கிகளை அரசிலிருந்து அந்நியப்படுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.