வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (12/09/2018)

கடைசி தொடர்பு:13:40 (12/09/2018)

நாப்கின் மிஷின், 50 சதவிகித நிதி, சி.சி.டி.வி கேமரா! - கலக்கும் டெல்லி மாணவர் சங்கத் தேர்தல்

அரசியல் கட்சிகளுக்கும் இந்தத் தேர்தல் முக்கியமானதாக இருக்கிறது

டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்துக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. `நாங்கள் வெற்றி பெற்றால் சமூகநீதிக்கு முக்கியத்துவம் அளிப்போம், ஐம்பது சதவிகித நிதியைப் பெண்களுக்காக ஒதுக்குவோம்' எனப் பிரசாரம் செய்து வருகிறது பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. 

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி, ஆம் ஆத்மி, காங்கிரஸ் உட்பட பல்வேறு முக்கியக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் என மொத்தம் 23 பேர் வெவ்வேறு பதவிகளுக்காகப் போட்டியிடுகின்றனர். பல்கலைக்கழகத்தின் மூத்த ஆசிரியர்கள் கண்காணிப்பில் மொத்தம் 700 வாக்கு இயந்திரங்களைக் கொண்டு இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர்கள் கூட்டமைப்பு மாணவர்களுக்கு பத்து ரூபாய்க்குச் சாப்பாடு கிடைக்கும்படி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்(ஏ.பி.வி.பி), ' நாங்கள் தேர்வு செய்யப்பட்டால், மாணவர் கூட்டமைப்பின் பட்ஜெட்டில் ஐம்பது சதவிகித நிதியை பெண்களுக்காகச் செலவிடுவோம்; சமூகநீதிக்கு முக்கியத்துவம் அளிப்போம்; பல்கலைக்கழகத்தில் நாப்கின் மெஷின்கள் ஆங்காங்கே வைக்கப்படும்' எனவும் வாக்குறுதி அளித்துள்ளனர். 

டெல்லி பல்கலைக்கழக தேர்தல் 2018

ஆம் ஆத்மி கட்சியின் மாணவர்கள் பிரிவும் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து இந்திய மாணவர் கூட்டமைப்பும் இந்தத் தேர்தலில் இணைந்து போட்டியிடுகின்றன. `நாங்கள் வெற்றிபெற்றால் பல்கலைக்கழகத்தில் சி.சி.டி.வி கேமிராக்கள் வைப்பதற்கு முக்கியத்துவம் தரப்படும்' என அவர்கள் பிரசாரம் செய்கின்றனர். 

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் கோயல், டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான், ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ அல்கா லம்பா உட்படப் பல முக்கியப் பிரமுகர்களின் அரசியல் வாழ்வின் தொடக்கமாக டெல்லி பல்கலைக்கழகம் இருந்துள்ளது. இவர்களில் பலர் அந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர், செயலாளர் உட்பட பல பதவிகளை வகித்துள்ளனர். இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நூபுர் ஷர்மா கூறுகையில், ``மாணவர் சங்கத் தேர்தல் மாணவர்களுக்கு அரசியலைக் கற்றுத்தரும். அவர்கள் தேசிய அரசியலில் ஈடுபடும் நிலையில் கல்லூரி அரசியல் வாழ்க்கை அவர்களுக்குப் பெரிதும் கைகொடுப்பதாக இருக்கும். அதனாலேயே, அரசியல் கட்சிகளுக்கும் இந்தத் தேர்தல் முக்கியமானதாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார். மாணவர் சங்கத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகின்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க